/indian-express-tamil/media/media_files/2025/04/21/0ldFZl2OHvwGnmS3IhDe.jpg)
முசிறி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்- செல்வி தம்பதியர்களுக்கு கோபிநாத் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த தம்பதியின் மகள் கெளசி சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
கோபிநாத் டிப்ளமோ படித்து விட்டு தோட்டத்தில் விவசாய வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்குச் சொந்தமான வீடு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகில் உள்ள அம்பாயிபாளையம் கிராமத்தில் உள்ளது.
இந்நிலையில், பாலசுப்ரமணியம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் செல்வியும், கோபிநாத்தும் தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளனர்.
மகன் கோபிநாத் வேலம்பட்டி கிராமத்தில் வயலில் உள்ள வீட்டின் முன்பு வாசலில் நேற்று (ஏப்ரல் 20) இரவு படுத்து உறங்கியுள்ளார். நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக அவரது தாயார் செல்வி வெளியே வந்து பார்த்தபோது கட்டிலில் படுத்திருந்த தனது மகன் கோபிநாத் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் சத்தம் போட்டு உள்ளார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்துள்ளனர்.
இருந்தபோதிலும், அதற்குள் கோபிநாத் உடல் முழுவதும் எரிந்து போனது. இதுகுறித்து, காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு முசிறி போலீஸ் டி.எஸ்.பி சுரேஷ்குமார், தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தைக் கைப்பற்றி, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு, திருச்சியிலிருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த இடத்தில் தடயங்களைச் சேகரித்துள்ளனர்.
வாசலில் படுத்து உறங்கிய வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தனது தோட்டத்தில் படுத்து உறங்கிய நபர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.