தி.மு.க சட்டதிட்ட விதி 17 - பிரிவு 3-ன்படி தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா, எம்.பி.யை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக பதவி உயர்வுடன் நியமனம் செய்யப்படுவதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கு முன்னதாக தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்த பொன்முடி அப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'கழக துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் எனத் தெரிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வெளியாகி சில நிமிடங்களிலேயே அந்தப் பதவியில், திருச்சி சிவாவை நியமித்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தி.மு.கவின் புதிய துணைப் பொதுச்செயலாளராக திருச்சி சிவா எம்.பி என்ற அறிவிப்பு திருச்சி தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பையும், பரபரப்பையும், சிவா ஆதரவாளர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
திராவிடர் கழகத்தில் இருந்து தி.மு.கவுக்கு வந்தவரான பொன்முடி, தமது துடுக்குத்தனமான பேச்சுகளால் பல சர்ச்சைகளில் சிக்கினார். இப்படித்தான் பழைய வரலாறு ஒன்றைப் பேசப் போய் கட்சிப் பதவியை பறிகொடுத்த கையோடு அமைச்சர் பதவியையும் இழக்கும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுவிட்டார்.
தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பொன்முடிக்கு பதில், திருச்சி சிவா, அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பதுதான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. திருச்சி சிவா, தி.மு.கவின் இளைஞரணி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே முதல்வர் ஸ்டாலினுக்கு வலதுகரமாக செயல்பட்டவர். தி.மு.கவில் ராஜ்யசபா எம்பி பதவி தொடர்ந்து திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டு. கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் தரப்பட்டு தி.மு.கவில் அவருக்கு முக்கியத்துவம், மரியாதையையும் கொடுத்து வந்தது கட்சி மேலிடம்.
ஆனால், திருச்சியில் வசிக்கக்கூடிய சிவாவுக்கும், திருச்சி ஆளுமையாக இருக்கும் அமைச்சர் கே.என். நேரு தரப்புக்கும் அவ்வப்போது மோதல் எழுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. திருச்சியின் அசைக்க முடியாத மாமன்னராக அமைச்சர் கே. என்.நேரு இருந்து வருகிறார். அவருக்கு எதிர் துருவமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார். அமைச்சர் நேருவுக்கும் திருச்சி சிவாவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அமைச்சர் நேரு vs திருச்சி சிவா என்று ஊடகங்களிலும் இரு தரப்பு மோதல் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்து தி.மு.க தலைமையை அவ்வப்போது நெருக்கடிக்குள்ளாக்கியிருந்தது.
தி.மு.க-வில் சீனியர்களில் ஒருவராக இருந்த போதும், ஆற்றல் மிகுந்த அறிவாளராக இருந்த போதும் கட்சி உயர்நிலைப் பதவிகளில் திருச்சி சிவா ஏற்றம் பெறுவதற்கு அமைச்சர் கே.என்.நேரு எப்போதும் முட்டுக்கட்டையாகவே இருப்பதாக தி.மு.க கட்சியினரே அவ்வப்போது பேசுவது உண்டு.
தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியபோதே, அந்த இடத்துக்கு கொள்கை பரப்புச் செயலாளரான திருச்சி சிவாவின் பெயர் அடிபட்டது. ஆனாலும் கனிமொழி எம்பிக்கு கட்சியின் உயர்நிலைப் பொறுப்பு ஒன்று தரப்பட வேண்டிய நெருக்கடியால் தி.மு.க தலைமை திருச்சி சிவாவுக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை. ஆனாலும் திருச்சி சிவா மனம் தளராமல் தமக்கு ஒதுக்கப்பட்ட பணியை எந்தவித சுனக்கமும் இல்லாமல் சிறப்பாகவே செய்து வந்தார்.
இது ஒரு புறம் இருக்க, அண்மையில் அமைச்சர் கே.என்.நேருவை சுற்றி வளைத்திருக்கிறது அமலாக்கத்துறை. அமைச்சர் நேரு, அவரது தம்பி உள்ளிட்டோர் அமலாக்கத்துறையின் விசாரணையில் சிக்கி இருக்கின்றனர். தி.மு.கவில் என்னதான் சீனியராக இருந்தாலும், அவரது அதி.மு.க மற்றும் டெல்லி தொடர்புகள் குறித்த சர்ச்சை அரசல் புரசலாகவே பேசப்பட்டு வந்தது. இந்த அரசல் புரசலான பேச்சுகளே அமைச்சர் நேரு குடும்பத்தை திருப்பித் தாக்கிக் கொண்டிருக்கிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள். இதனை எல்லாம் உணர்ந்ததால்தான், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கோபத்தைக் காட்டிய தி.மு.க தலைமை, அமைச்சர் நேரு விவகாரத்தில் கண்டுகொள்ளாமலேயே கடந்தும் போனது எனவும் கூறப்படுகிறது.
இந்த தருணத்தில் பொன்முடி விவகாரம் விஸ்வரூபம் எடுக்க, ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்திருக்கிறார் தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின். எப்போதும் தமக்கு சர்ச்சைகளையே பரிசாக தரும் அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவியை பறிக்கும் அறிவிப்பை தாமே வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதே சூட்டோடு, தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளராக, கொள்கை பரப்புச் செயலாளர் என்கிற பத்தோடு பதினொன்று பதவியில் இருந்த திருச்சி சிவா எம்.பி0-யையும் நியமித்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
இதனால் திருச்சியில் அமைச்சர் நேருவுக்கு எதிரான தரப்பு குறிப்பாக திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சியில் இதுநாள் வரை தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்த அமைச்சர் நேருவுக்கு செக் வைக்கும் வகையில், தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக மிகப்பெரிய பதவியை பெற்ற திருச்சி சிவாவும் களத்தில் நிற்கின்றனர்.
தமிழகத்தில் தி.மு.கவின் ஆளுமைகளில் திருச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவே திருச்சியில் வசிக்கும் கே.என். நேரு தி.மு.க முதன்மைச் செயலாளராகவும், அமைச்சராகவும், திருச்சி சிவா துணைப் பொதுச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சர் அன்பில் மகேஷ் தெற்கு மாவட்ட செயலாளர் ஆகவும் அமைச்சராகவும் திருச்சியில் வலம் வர இருப்பது திருச்சி தி.மு.க ஒட்டுமொத்த தி.மு.கவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதேநேரம், தற்போதைய தி.மு.க நிகழ்வுகள், பொன்முடிக்கு முடிவு கட்டக் கூடியது மட்டுமல்ல, திருச்சியின் மாமன்னராக நினைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் கே.என் நேருவுக்கும் வேட்டு வைக்கக் கூடியதுதான் என்கின்றனர் அறிவாலய சீனியர் வட்டாரங்கள்.
செய்தி: க.சண்முகவடிவேல்