தமிழகத்தில், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. எம்.எல்.ஏ.,க்கள், 10 பேரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே, வேட்பு மனு ஏற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களான , அ.தி.மு.க.,வை சேர்ந்த சசிகலா புஷ்பா, செல்வராஜ், முத்துகருப்பன், விஜிலா சத்தியானந்த், தி.மு.க.,வை சேர்ந்த திருச்சி சிவா, மார்க்சிஸ்ட், டி.கே.ரங்கராஜன் ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம், ஏப்ரல் மாதம், 2ம் தேதியுடன் நிறைவடைகிறது.இதையடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், இன்று துவங்குகிறது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 13ம் தேதி கடைசி நாள்.
வேட்பு மனுக்களை, சொத்துப்பட்டியல் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச்செயலகத்தில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (விடுமுறை நாளான 8-ந்தேதி தவிர) தாக்கல் செய்யலாம்.
ஒரு வேட்பாளரை 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும். ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை வருகிற 16-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற 18ம் தேதி கடைசி நாள் போட்டிக்களத்தில் 6 வேட்பாளர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே 26ம் தேதி தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்ற குழுக்கள் அறையில் வாக்குப்பதிவு நடத்தப்படும்.
காலியிடத்துக்கு சமமாக 6 வேட்பாளர்கள் மட்டுமே இறுதிக்களத்தில் இருந்தால் 18ம் தேதியன்றே தேர்தல் முடிவு வெளியிடப்படும். 6 பேருக்கு மேல் இருந்தால், வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு நடந்த 26ம் தேதி அன்றே மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடவடிக்கைகள் வருகிற 30ம் தேதியுடன் நிறைவடையும்.
இந்த தேர்தலுக்காக தமிழ்நாடு சட்டசபை செயலாளரை (கி.சீனிவாசன்) தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், கூடுதல் செயலாளரை (பா.சுப்பிரமணியம்) உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் இந்திய தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil