திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பருத்தி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி வந்த சரக்கு லாரி, திருவெறும்பூர் அடுத்துள்ள காட்டூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து 4 இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்த விபரம் வருமாறு;
திருவாரூர் பகுதியில் இருந்து தேனி நோக்கி திருச்சி வழியாக பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு லாரி திருவெறும்பூர் அடுத்துள்ள காட்டூர் கடை விதியில் கட்டுப்பாட்டை இழந்து தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த சாலை வேகத்தடுப்புகளை தட்டிக்கொண்டு சென்றது. இதில் லாரி, சாலையின் ஓரத்தில் நின்ற 4 இரு சக்கர வாகனத்தின் மீது மோதி ஏறி இறங்கியதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களை அப்பகுதியினரும் திருப்பெரும்பூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசாரும் இணைந்து மீட்டு திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் தஞ்சை- திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து தடைபட்டது. பின்னர், போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை தனியார் வாகனம் மூலம் ஏற்றி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இந்த விபத்து குறித்து அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில்; காட்டூர் கடை வீதியில் இருசக்கர வாகனங்கள் சாலை ஓரத்தில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றது. சில சமயங்களில் சாலையின் நடுப்பகுதி வரை இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர்.
இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது, இதனை தடுப்பதற்கு போலீசார் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருக்கும் இருசக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“