தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட 98வது வட்டத்தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரியதர்ஷினிக்கு ஆதரவாக நடிகை ரோகிணி அயனாவரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளருமான அவர், வாக்காளர்களுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மக்கள் நலனுக்காகவும் உரிமைக்காகவும் எப்போதும் போராடுவது கம்யூனிஸ்ட் கட்சி. வார்டு கவுன்சிலராக கம்யூனிஸ்ட்டை தேர்வு செய்தால் அவர்கள் உங்கள் நலனுக்காக பாடுபடுவார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து தீர்வு காண்பார்கள். மக்களுடன் தொடர்பில் இருப்பவர்களாலும், அக்கறையுள்ளவர்களாலும் மட்டுமே அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
தேர்தலில் போட்டியிடும் இளம் வேட்பாளர்களில் ஒருவராக பிரியதர்ஷினி இருந்தாலும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைநன்கு அறிந்தவர். குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பவதாகவும், ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். குறிப்பாக, நீண்டகாலமாக நிலவி வரும் பட்டா பிரச்னைகளையும் தீர்த்து வைப்பார்" என தெரிவித்தார்.
தொடர்ந்து ரோகிணியிடம் ஹிஜாப் தடை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அனைவருக்கும் அவரவர் விருப்பப்படி உடை அணிய சுதந்திரம் உள்ளது.இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.பிரிவினைவாத அரசியலை ஊக்குவிக்கக் கூடாது. நாட்டின் பன்முகத்தன்மையில் மத நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil