கலெக்டரை கொல்ல முயற்சி : திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை, அவர் அலுவலகம் அருகிலேயே கொல்ல முயற்சி நடந்தது. கூலி படையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை, அவர் அலுவலகம் அருகிலேயே கொல்ல முயற்சி நடந்தது. இது தொடர்பாக கூலி படையைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக கே.எஸ்.கந்தசாமி கடந்த 31-ந்தேதி பதவி ஏற்றார்.நேற்று மதியம் கலெக்டர் கந்தசாமி பணிகளை முடித்து விட்டு அலுவலகம் எதிரே உள்ள கலெக்டர் பங்களாவுக்கு மதிய உணவு சாப்பிட நடந்து சென்றார். அவருடன் நேர்முக எழுத்தர், டபோதர் ஆகியோரும் சென்றனர்.

கலெக்டர் பங்களா கேட் அருகே கலெக்டர் கந்தசாமி சென்றபோது மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர்.திடீரென்று கலெக்டரை தாக்கி கீழே தள்ளினார்கள்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நேர்முக எழுத்தர் கூச்சல் போட்டார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், கலெக்டர் பங்களா பணியாளர்களும் ஓடி வந்து 3 பேரையும் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து கத்தி, மிளகாய் பொடி இருந்தது. பின்னர் அவர்களை திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த சிவா, மணிகண்டன், திருப்போரூரை அடுத்த தாழம்பூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பதும் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறுகையில், “விழுப்புரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்ததாகவும், பின்னர் திருவண்ணாமலைக்கு வந்து ஒரு மது பாரில் மது குடித்தபோது ஒருவரிடம் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து அந்த நபரை பின் தொடர்ந்து சென்றோம்.

அந்த நபர் அணிந்திருந்த அதே கலர் சட்டையை கலெக்டர் அணிந்திருந்ததால் ஆள் மாறாட்டத்தில் கலெக்டரை தாக்கி கொல்ல முயன்றதாகவும் கூறினார்கள்.

அவர்கள் 3 பேரும் வந்த மோட்டார்சைக்கிள் திருட்டு வண்டி என்பது தெரிய வந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் போலீஸ் பாதுகாப்பை மீறி கலெக்டர் பங்களாவுக்குள் நுழைந்து தைரியமாக கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பதால் ஆள் மாறாட்டத்தில் நடந்த சம்பவமா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. எனவே கைதான 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்த ஏ.எஸ்.பி. ரவளிப்பிரியா, ஏ.டி.எஸ்.பி. ரங்கநாதன், டி.எஸ்.பி. தேவநாதன் ஆகியோரை கொண்ட குழுவை போலீஸ் சூப்பிரண்டு பொன்னி அமைத்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கலெக்டருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

×Close
×Close