அதிமுக-வின் புகழை நேர்மையற்ற வகையில் பயன்படுத்த முயற்சிக்கிறார், டிடிவி.தினகரன் : ஓபிஎஸ் புகார்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையும், அம்மா என்ற பெயரையும் பயன்படுத்தி, தன்னை ஜெயலலிதாவின் வாரிசு போல காட்ட அவர் முயற்சிக்கிறார், டி.டி.வி.தினகரன்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், கட்சியின் புகழை நேர்மையற்ற வகையில் பயன்படுத்தவும், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டிடிவி. தினகரன், மதுரை மேலூரில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அக்கூட்டத்தில் கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கொடியின் நடுவே, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவம் இடம் பெற்றுள்ளது.

இக்கொடியை, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ’’டிடிவி.தினகரனின் கட்சியின் கொடி அஇஅதிமுகவின் கொடியைப் போல கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது. இதுதொடர்பாக வேறு எந்த கட்சியும் அதிமுகவின் கொடியைப் போல ஒத்த வடிவமைப்பைப் பயன்படுத்தக் கூடாது என ஏற்கெனவே கட்சியின் 4- வது விதிகளில் தெளிவாக உள்ளது.

எனவே டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் புதிதாக உருவாக்கியுள்ள கொடியைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதிமுகவின் கொடியில் உள்ள நிறங்களைப் பயன்படுத்தியதற்காக டிடிவி.தினகரன் 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்’’ தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அஇஅதிமுக சார்பில் தாக்கல் செய்த மனுவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி. தினகரன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ’’அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடிக்கும், அதிமுக கொடிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. கட்சியின் கொடி அளவு, அமைப்பு, அதில் இடம்பெற்றுள்ள உருவம் ஆகியவை அதிமுக கொடியில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை.

கொடியையோ, நிறத்தையோ பயன்படுத்தக் கூடாது என உரிமை கோர அதிமுகவுக்கு அதிகாரம் இல்லை. திராவிடத்தை சார்ந்த எந்தவொரு கட்சியும் கருப்பு, சிகப்பு நிறத்தை தனியாகவோ, அல்லது வேறு அடையாளங்களுடனோ பயன்படுத்த முடியும். ஒரு கட்சி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது எதேச்சதிகாரம் கொண்டதாகும்.

எங்களது கொடியில் கருப்பு, சிகப்பு ஆகிய நிறங்கள் 50% இடத்தை மட்டுமே பிடித்துள்ளனர். மீதமுள்ள 50% வெள்ளை நிற இடத்தில் ஜெயலலிதா படத்தை பயன்படுத்தியுள்ளோம். சாதாரணமாக யாரும் பார்த்தால் கூட திமுக, அதிமுக கொடிகளுக்கும், எங்கள் கொடிக்கும் வித்தியாசங்களை காணமுடியும். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை பின்பற்றுபவர்கள் கருப்பு சிகப்பை பயன்படுத்திதான் வருகின்றனர். அதை அதிமுக மட்டும் உரிமை கோரமுடியாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், எந்த ஒரு கொடிக்கும் சட்டரீதியான பாதுகாப்பு இல்லை என உயர் நீதிமன்றம் வழக்கொன்றில் தெளிவு படுத்தியுள்ளது. இந்நிலையில், கருப்பு, வெள்ளை, சிகப்பு கொடி தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று அதிமுக உரிமை கோர முடியாது. எனவே அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என பதில் சொல்லியிருந்தார்.

டி.டி.வி தினகரன் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவிற்கு, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இன்று விளக்க பதில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. அதில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், அதிமுக-வின் புகழை நேர்மையற்ற வகையில் பயன்படுத்த முயற்சிக்கிறார். மேலும் பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அதிமுக கொடியைப் போல தன் கட்சிக் கொடியை தினகரன் வடிவமைத்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையும், அம்மா என்ற பெயரையும் பயன்படுத்தி, தன்னை ஜெயலலிதாவின் வாரிசு போல காட்ட அவர் முயற்சிக்கிறார் என விளக்க பதில் மனுவில் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். எனவே அதிமுக கொடியை போல உள்ளதால் டிடிவி தினகரன் தனது கட்சி கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் கட்சி கொடியில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு எதிராக கூடுதல் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

×Close
×Close