பல உயிர்களை விழுங்கிய ஆழிப்பேரலை சுனாமி... இந்தோனேசியாவின் வலியை உணரும் தமிழகம்

ஆயிரக்கணக்கானோரை பலி கொண்டு இந்தியாவில் தென் மாநிலங்களிலும், இலங்கையிலும் கலங்கடித்து சென்றது சுனாமி.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி உலகை உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலை தமிழகத்தையும் விட்டுவைக்க வில்லை. அன்று காலையில் 9.15 மணியளவில் அடுத்தடுத்து 2 முறை சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியதில் சென்னை மற்றும் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வசித்து வந்தவர்கள், சுற்றுலா வந்தவர்கள் என 800க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். ஏராளமானோர் காணாமல் போயினர். உறவுகளை இழந்தவர்கள், உடன்பிறப்புகளை இழந்தவர்கள் என்று சுனாமி பேரலையின் தாக்கத்தில் இருந்து விடுபடாதவர்கள் வேதனையில் இன்றும் வாடி வருகின்றனர்.

கடலோர மாவட்டங்களில் நீங்காத துயரத்தை ஏற்படுத்திச் சென்ற சுனாமியின் தாக்குதலின் 14ம் ஆண்டு நினைவு தினம் வரும் 26ம் தேதி அனுசரிக்கப்படும் வேளையில், மீண்டும் உலகை துக்கத்தை ஆழ்த்தியுள்ளது இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி.

சுனாமி நினைவு தினம்:  இந்தோனேசியாவில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

இந்தோனேஷியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளுக்கு இடையே அமைந்துள்ள கிரகதோ எரிமலை வெடித்து சிதறியது. இதனைத் தொடர்ந்து கடலோர பகுதிகளை சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்திற்கும் அதிகமாக சீறி பாய்ந்த அலைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 281 ஆக அதிகரித்துள்ளது. 843 படுகாயம் அடைந்துள்ளதாகவும், 28 பேர் மாயமாகி உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

புத்தாண்டும், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதையொட்டி பலரும் கடற்கரையில் கொண்டாட்டங்களை தொடங்கினர். ஆடல் பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. பலரும் குழந்தைகளுக்கு விடுமுறை நடைபெறுவதால் இந்தோனேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இப்படியொரு துயரம் நடந்திருப்பது உலகில் உள்ள அனைவரையும் விட தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் சீற்றத்தால் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணத்தில் சொந்தங்களை இழந்த வலியை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடிந்தது. வருகின்றன சுனாமி நினைவு தினத்தில், 2004ம் ஆண்டு உயிரிழந்தவர்களுக்கு மட்டுமின்றி சனிக்கிழமை இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பலியானோருக்கும் அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர் உறவுகளை இழந்த குடும்பத்தினர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close