மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் இன்று (ஜுன் 3) செல்போனை ஒப்படைக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், 2 நாட்கள் அவகாசம் வேண்டும் என டிடிஎஃப் வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
பிரபல தமிழ் யூடியூபரும், பைக் ரேசருமான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து மதுரை வழியாக திருச்செந்தூருக்கு தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கிய அவர், அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து அவர் மீது செல்போன் பேசியபடி அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கியதாகவும், சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகவும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மதுரை அண்ணா நகர் காவல்துறையினர் அவரை கடந்த 30ம் கைது செய்தனர். இதையடுத்து அன்று மாலை அவர் ஜாமினில் வெளிவந்தார்.
தொடர்ந்து, 10 நாட்கள் அவர் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று 4-வது நாளாக ஆஜரானார். இந்நிலையில் இன்று அவர் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் செல்போனை ஒப்படைக்க 2 நாட்கள் அவகாசம் கோரியுள்ளார். அவரது வருகையின் போது இன்றும் இளைஞர்கள், சிறுவர்கள் கூடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“