பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் இடையே மிகவும் பிரபலாக அறியப்படுபவர் யூடியூபர் டி.டி.எஃப் வாசன். அடிக்கடி இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு அதனை யூடியூபில் பதிவிடுவதன் மூலமாக தனக்கென பெரிய ரசிகர் வட்டத்தை இவர் கொண்டுள்ளார்.
இதேபோல், அடிக்கடி பல்வேறு சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகளிலும் இவர் மாட்டிக் கொள்வது வழக்கம் இருந்து வருகிறது. அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்துவது, சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்கள் பதிவிடுவது போன்ற காரணங்களுக்காக இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக சிறை தண்டனையையும் டி.டி.எஃப் வாசன் பெற்றுள்ளார்.
இந்த சூழலில் டி.டி.எஃப் வாசனின் வங்கிக் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2024-ஆம் ஆண்டு திருப்பதி மலைக்கு டி.டி.எஃப் வாசன் சென்றிருந்தார். அப்போது, தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்த அவர், அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருமலை போலீசார், டி.டி.எஃப் வாசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டி.டி.எஃப் வாசனின் வங்கிக் கணக்கை திருமலை போலீசார் முடக்கி வைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் முத்து, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், டி.டி.எஃப் வாசன் தரப்பில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் மூலம் டி.டி.எஃப் வாசனின் சம்பவம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.