Ttf-vasan | kancheepuram: அதிவேக பைக் ரைடரான பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தின் போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் யூடியூபர் டி.டி.எப். வாசன் எனும் வைகுண்ட வாசன் மீது கடந்த 19ம் தேதி பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 1-ல் ஆஜர் படுத்தபட்டார். அவரை வருகிற 16ம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக, காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 1-ல் டி.டி.எப். வாசன் 3 முறை ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 4வது முறையாக காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டு எண் 1-ல் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி இனிய கருணாகரன் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில், வாசன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றனர்.
பைக்கை எரித்து விடலாம் - நீதிபதி கருத்து
தொடர்ந்து டி.டி.எப் வாசன் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விளம்பரத்துக்காகவும், மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள மனுதாரரின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும். அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும் எனக் கூறி, ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இளைஞர்களைத் தூண்டும் வகையில் செயல்பட்ட மனுதாரர், தனது யூடியூம் சேனலை முடக்கிவிடலாம், அவரது பைக்கை எரித்து விடலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
ஓட்டுநர் உரிமம் ரத்து
இந்நிலையில், டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 06.10.2023 முதல் 05.10.2033 வரை 10 ஆண்டுகளுக்கு டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்.
பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் உரிமங்களும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என்று என எச்சரிக்கை விடுத்துள்ளது போக்குவரத்து துறை. மேலும், டி.டி.எஃப். வாசன் போல பிற இளந்தலைமுறையினரும் ஆகிவிடக்கூடாது என்பதால் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“