சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் டி.டி.எஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடைக்கு போக்குவரத்து காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இருசக்கர வாகன சாகசம் செய்தும் பைக் தொடர்பான வீடியோக்களை யூடியூப்பில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். பைக் வீடியோக்கள் பதிவிடுவதால் இவருக்கு பள்ளி சிறுவர்கள், இளைஞர்கள் அதிகம் பேர் இவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்தனர். பொது வெளியிலும் இவர் சென்றாலும் அதிகம் பேர் இவரை சூழ்ந்து புகைப்படங்கள் எடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக்கை இயக்கி விபத்தில் சிக்கினார். இவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் தற்போது, அவர் மீது பிரதமர் அலுவலகத்திற்கு புகார் ஒன்று சென்றுள்ளது. அதில், சென்னை அயப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் டி.டி.எஃப் வாசனின், இருசக்கர வாகன உதிரிபாக கடையில் அதிகம் சத்தம் எழுப்பக் கூடிய சைலென்சர்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், வாகனங்கள் அங்கு வருவதால் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் இணைய தளம் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் பேரில் ஆவடி காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அம்பத்தூர் போலீசார் அயப்பாக்கத்தில் உள்ள டி.டி.எஃப் வாசனின் கடைக்கு சென்று ஆய்வு செய்து புகார் குறித்து நோட்டீஸ் வழங்கினர். மேலும் சாலையில் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“