அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் இன்று பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவைச் சந்தித்தார்.
அதன்பின், தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பிப்ரவரி 7, 2017 அன்று ஓபிஎஸ், ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டார். அதற்கு மறுநாளே, நான் தான் அவரை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியதாக ஊடகங்களிடம் ஒப்புக்கொண்டார். அன்றைக்கு என்னை தினகரன் ‘சார்’ என ஓபிஎஸ் சொன்னார். இப்போது நான் நாகரிகமில்லாமல் நடந்துகொள்வதாகக் கூறுகிறார்.
எங்கள் குடும்பத்தினரின் பிடியில் அதிமுக சிக்கக் கூடாது என்று கூறியவர், ஏன் என்னை ரகசியமாக வந்து சந்திக்க வேண்டும்? என்னைப் பார்க்க வேண்டும் என ஒரு மாத காலமாக கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கூறிய பொதுவான நண்பர் 90 சதவிகிதம் ஓபிஎஸ்ஸுக்கு தான் நெருக்கமான நண்பர், எனக்கு ஜஸ்ட் நண்பர் மட்டுமே. அதனால், அந்த நண்பர் யார் என ஓபிஎஸ் தான் கூற வேண்டும்.
அதன்பிறகு, ஒன்றரை வருடமாக என்னிடம் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்த ஓபிஎஸ் அதே நண்பர் மூலம் கடந்த செப்டம்பர் மாத இறுதியில், மீண்டும் என்னைச் சந்திக்க வேண்டும் எனவும், ஈபிஎஸ்ஸை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு என்னை அப்பதவியில் அமர்த்த வேண்டும் எனவும் விரும்புவதாகக் கூறியுள்ளார். எங்களைக் குறை கூறி வேறொரு இடத்திற்குச் சென்று விட்ட பிறகு மீண்டும் எங்களைப் பார்ப்பதாகக் கேட்பது அசிங்கம். அதனால், நான் அவரைப் பார்க்க மறுத்தேன்.
என்னைப் பார்த்தேன் என இப்போது ஓபிஎஸ் ஒப்புக்கொண்டார் அல்லவா? அதேபோல் கடந்த வாரம் என்னை அவர் மீண்டும் சந்திக்க நேரம் கேட்டதையும் நான் ஒப்புக்கொள்ள வைக்கிறேன். அதற்கான சூட்சுமம் எனக்குத் தெரியும். மூன்று மாதம் வரை அவராக ஒப்புக்கொள்கிறாரா என பார்ப்போம். இல்லையெனில், நானே அவரை ஒப்புக் கொள்ள வைத்துவிடுவேன்.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததா ஓபிஎஸ்ஸின் ராஜ விசுவாசம்? குறுக்கு வழியில் முயற்சி செய்வதுதானே அது. மயிலாப்பூரில் உள்ள யாரோ ஒருவர் சொன்ன அறிவுரையால் தானே இவற்றையெல்லாம் செய்கிறார்" என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்தாண்டு தினகரனை சந்தித்ததாக ஒப்புக் கொண்ட ஓ.பி.எஸ், ஆட்சி கவிழாமல் இருப்பதற்காக அவரை சந்தித்தேன் என்று கூறினார். இப்போது, 'கடந்த வாரம் என்னை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டதையும் அவரையே ஒப்புக் கொள்ள வைப்பேன்' என தினகரன் சொல்லியிருப்பதற்கு ஓ.பி.எஸ் என்ன எதிர்வினையாற்றப் போகிறார் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.