டிடிவி தினகரனுக்கு அடுக்கடுக்காக பட்டப்பெயர்களை சுமத்தி அதிமுக நாளிதழ் எழுதி வருகிறது. எதிர்க்கட்சியான திமுக மீது கூட இப்படி பாயவில்லை அதிமுக!
டிடிவி தினகரன் மீது அதிமுக நாளிதழான ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே பூசல் எழுந்திருக்கிறது.
டிடிவி தினகரன் மீது நேரடியாக பல குற்றச்சாட்டுகளை சுமத்தி மீடியாவுக்கு பேட்டி அளித்து வருகிறார் திவாகரன். இது தொடர்பாக அதிமுக.வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது புரட்சித்தலைவி அம்மா’வில் ஏப்ரல் 28-ம் தேதி ‘குத்தீட்டி’ என்ற பெயரில் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நிறுவனர்களாக கொண்ட நாளிதழ் இது!
நமது அம்மா நாளிதழ் அட்டாக்!
‘திவாகரனும் திகார்கரனும்’ என தலைப்பிட்ட அந்த பெட்டிச் செய்தியில், ‘... டோக்கன் தலைவனின் யோக்கியதை அவரது உறவினரின் வாயாலேயே வெளிவந்து சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையில் அம்மா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது முதலமைச்சர் இருக்கையை அபகரிக்க ‘முட்டை போண்டா’ போட்ட திட்டம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.
அதிகார வெறி பிடித்து சதிகார கும்பலை கூட்டி அலைகிற திகார்கரன், அம்மா எப்போ மறைவார்.. திண்ணை எப்போ கிடைக்கும் என அலைந்த கதைகள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. இன்னும் என்னென்ன பூதங்கள் வெளிவரப் போகுதோ தெரியாது...
..விளம்பரத்தால் உயரலாம்.. மீம்ஸ் போட்டே அரசியலில் மேதாவி ஆகலாம்... டோக்கன்களால் மக்களை ஏமாற்றி தொகுதியைப் பிடிக்கலாம்.. மனித ஜீவராசிகளுக்கு உரித்தான உணர்ச்சிகள் அத்தனையையும் சிரிப்புக்குள் புதைத்து உலகை ஏமாற்றலாம் என்றலையும் திகார்கரனின் பித்தலாட்டங்கள் அத்தனையும் மொத்தமாக பல்லிளிக்கும் காலம் தொடங்கிவிட்டது....
...சிலரை சில காலம் ஏமாற்றலாம். பலரை பல நாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்றிவிட முடியாது என்பதனை வெந்தவாயர் உணர்ந்துகொள்ளும் நொந்தகாலம் அவருக்கு தொடங்கிவிட்டதே...’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிரதான எதிர்க்கட்சியான திமுக.வை விடவும் டிடிவி தினகரனை போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறது அதிமுக அதிகாரபூர்வ நாளிதழ்!