"எங்களுக்கு துரோகம் செய்தவர்கள் பட்டியலில் 10 முக்கிய நபர்கள் இருக்கிறார்கள்; அவர்களை படுதோல்விய அடையச் செய்ய கடுமையாக உழைப்போம்" என அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய தினகரன், 'நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என எதிர்பார்க்கிறோம். பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமித்துள்ளோம். எடப்பாடி தொகுதி மட்டுமின்றி, 234 தொகுதியிலும் முழு கவனம் செலுத்துவோம்' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய தினகரன், "எங்களுக்கு துரோகம் செய்தவர்கள் பட்டியலில் 10 முக்கிய நபர்கள் இருக்கிறார்கள். அவர்களை படுதோல்விய அடையச் செய்ய கடுமையாக உழைப்போம். துரோகம் இழைத்தவர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம்.
வருமான வரித்துறை சோதனையை பார்த்து, தமிழக முதல்வர் கடந்த ஒன்றரை வருடமாக பயந்து கொண்டுதான் இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது இல்லாத பயம் அதன் பின் அதிகரித்துவிட்டது. கைப்பற்றப்பட்ட ரூ.180 கோடி சிறு பங்குதான். மேலும், அவிநாசி அருகே தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் என்பதால், ஆதிக்க சாதிகளின் அழுத்தத்தில், அரசு இடமாற்றம் செய்திருப்பதாக வந்திருக்கும் செய்தி, 'இதெல்லாம் ஒரு அரசா!?' என்ற கேள்வி எழுகிறது" என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.