நாஞ்சில் சம்பத்திற்கு எல்லாம் தெரிந்தும் விமர்சித்தது வருத்தமே! - டிடிவி தினகரன்

இந்தப் பெயரை தேர்வு செய்வதற்கு முன்பு சிலரிடம் நான் ஆலோசனை நடத்தி கருத்துகள் கேட்டேன்

நாஞ்சில் சம்பத் விலகல் குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “நாஞ்சில் சம்பத் என்னைவிட வயதில் மூத்தவர். அவர் அண்ணாவை பார்த்திருக்கலாம். பெரியாரைப் பார்த்திருக்கலாம். தலைவரிடம் இருந்ததில்லை. திமுகவில் இருந்தார், மதிமுகவில் இருந்தார். அதன்பின் அம்மாவிடம் வந்தார். இந்தக் கட்சியில் ரொம்ப நாள் இருந்தார். நான் பச்சைப் படுகொலை செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அவர் நன்றாகவே பேசுவார். ஜெயலலிதாவுக்கும் திராவிடத்திற்கும் தொடர்பு இல்லாததுபோல் பேசுகிறார் சம்பத்.
அம்மாவை அவமதிக்கும் வகையில் அவர் பேசியிருப்பது தான் வருத்தமாக உள்ளது. சரி! ஏதோ பேசிவிட்டார். அதை விட்டுவிடலாம்.

எங்களைப் பொறுத்தவரை இந்த அமைப்பு என்பது ஒரு இடைக்கால ஏற்பாடு தான். டெல்லி உயர்நீதிமன்றத்தில், நாங்கள் மூன்று பெயர்களை பரிந்துரை செய்திருந்தோம். அது அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர் அம்மா அம்மா திராவிடக் கழகம் என்று கூட பெயர் ஆப்ஷன் கொடுத்திருந்தேன். அது நாஞ்சில் சம்பத்திற்கும் தெரியும். ஆனால், அதை ஏன் மறைக்கிறார் என தெரியவில்லை. ஆனால், நான் கொடுத்திருந்த பெயர்கள் ஏற்கனவே ரெஜிஸ்டர் ஆகியிருந்ததால் தான் ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரை தேர்வு செய்தோம். கொடியைப் பொறுத்தவரை நடுவில் 50 சதவிகிதம் வெள்ளை நிறமும், மேலே 25 சதவிகிதம் கருப்பு நிறமும், கீழே 25 சதவிகிதம் சிகப்பு நிறமும் வைத்து, நடுவே அம்மாவின் படத்தை பெரிதாக போட்டு உருவாக்கி இருந்தோம். கொடியில் நிறம் பயன்படுத்துவதற்கு யாரும் உரிமை எல்லாம் வாங்கவில்லை.

இந்தப் பெயரை தேர்வு செய்வதற்கு முன்பு சிலரிடம் நான் ஆலோசனை நடத்தி கருத்துகள் கேட்டேன். பலரிடம் கருத்து கேட்கவில்லை. அப்படி கேட்டால், அது வெளியே தெரிந்துவிடும் என்பதனால் தவிர்த்தேன்.
எனவே, திராவிடத்தை புறக்கணித்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சிப்பெயரை காரணமாகக்கூறி நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தம் அளிக்கிறது” என்றார்.

×Close
×Close