சென்னை பெசன்ட் நகரில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "முதல்வர் பழனிசாமி அணியில் இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் வாக்கெடுப்பு சமயத்தில் தங்களது இருப்பை வெளிக்காட்டுவார்கள். விசாரணை ஆணையத்தில் அளித்துள்ள பென்டிரைவில் இருந்த காட்சிகளில் ஒரு பகுதியைத் தான் வெற்றிவேல் வெளியிட்டிருந்தார். என்னிடம் என்ன வீடியோ ஆதாரம் இருந்ததோ அதைத் தான் விசாரணை ஆணையத்திடம் கொடுத்திருக்கிறேன்.
சட்டசபையில், ஆர்கே நகர் தொகுதி பிரச்சனை மட்டுமின்றி, தமிழகத்தில் பாதிக்கப்படும் விஷயங்கள் மற்றும் நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகளின் பிரச்சனை குறித்து பேசுவேன்.
மத்திய அரசை கண்மூடித் தனமாக எதிர்க்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணமல்ல. தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் ஜெயலலிதா மத்திய அரசுடன் சுமூகமான உறவை கடைபிடித்தார். நல்ல திட்டங்களை வரவேற்பதும், கொள்கைகளை பாதிக்கும் விஷயத்தில் எதிர்ப்பதும் தான் ஜெயலலிதாவின் பண்பு. அதைத் தான் நானும் கடை பிடிக்கிறேன்.
ஆன்மிகம் என்பது ஒவ்வொரு தனி மனிதனின் தனிப்பட்ட விருப்பம். எனக்கு கடவுள் பக்தி இருப்பதால் உங்களுக்கும் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. ஆன்மிகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்தக் கூடாது. அது தவறாகப் போய் முடியும் என்பது தான் என்னுடைய கருத்து.
மதம் என்பது வாழ்க்கை முறை, இறை வழிபாடு என்பது ஒழுக்கத்திற்காக கடைபிடிப்பது. அதை அரசியலில் கொண்டு வருவது வேறு மாதிரியாகிவிடும். ஒரு மதத்தின் நல்ல விஷயம் மற்றொரு மதத்திற்கு ஒத்துவராது. அதை எடுத்துக் கொண்டு, இந்த நூற்றாண்டில் ஆன்மிக அரசியல் என்று சொல்வது சரியானதாக இருக்காது என்பது என்னுடைய கருத்து" என தினகரன் கூறியுள்ளார்.