அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி தினகரன். கட்சியை பதிவு செய்யவும் முடிவு செய்திருக்கிறார் டிடிவி தினகரன்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கினார். இதன் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கட்சி சின்னம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘கட்சியை பதிவு செய்யத் தயார்’ என டிடிவி தினகரன் தரப்பு கூறியது. கட்சியை பதிவு செய்யாவிட்டால், அடுத்து வருகிற இடைத்தேர்தல்கள், சட்டமன்றப் பொதுத்தேர்தல் ஆகியவற்றில் பொதுச் சின்னம் பெற கட்சியை பதிவு செய்வது முக்கியம் என டிடிவி தினகரன் முடிவு செய்தார்.
இதற்கிடையே பதிவு செய்யப்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா தொடர்ந்தால், அதிமுக.வுக்கு உரிமை கோரும் வழக்கை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் எழும் என கருதினர். எனவே வி.கே.சசிகலாவை அமமுக பொறுப்பில் இருந்து விடுவித்துவிட்டு, டிடிவி தினகரன் அமமுக பொதுச்செயலாளர் ஆகியிருக்கிறார்.
சென்னையில் அமமுக தலைமை அலுவலகத்தில் இன்று கூடிய நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை செய்தியாளர்கள் மத்தியில் அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி அறிவித்தார். சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
அமமுக.வை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் நடவடிக்கையை உடனடியாக தொடங்குவார்கள் எனத் தெரிகிறது.