ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தை வரும் காலத்தில் மீட்போம் என டிடிவி தினகரன் குறிப்பிட்டார். அசோக் நகரில் புதிய அலுவலக திறப்பு விழாவில் இவ்வாறு பேசினார்.
டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு சென்னை அசோக் நகரில் புதிய அலுவலகம் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையாவின் இல்லத்தையே அலுவலகமாக மாற்றியிருக்கிறார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இந்த புதிய அலுவலகத்தை டிடிவி தினகரன் இன்று (ஜூன் 3) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ‘அதிமுக.வை மீட்பதற்காக 30 வருடங்களுக்கு முன்பு ஆழ்வார்பேட்டையில் அசோக் நகரில் தனி அலுவலகம் அமைத்தார் அம்மா (ஜெயலலிதா). அதேபோல இன்று நாம் இயக்கத்தை மீட்டெடுக்க அசோக் நகரில் அலுவலகம் தொடங்கியிருக்கிறோம்.
அம்மாவின் பெயரை தாங்கியிருக்கும் இயக்கத்தில் நாம் பெருகையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மாபெரும் இயக்கத்தை துரோகிகள் ஆட்கொண்டு அடிமைகளாக இருந்து கொண்டிருக்கிறார்கள். தூத்துக்குடியில் 13 பேர் இறந்தபோது, அங்கே செல்ல ஆட்சியாளர்களுக்கு திராணி இல்லை.
தென் கோடியில் மண்டைக்காட்டில் கலவரம் நடந்தபோது புரட்சித்தலைவர் நேரடியாக சென்றார். அம்மா ஆட்சியில் இருந்தபோது எங்கு பிரச்னை என்றாலும் சென்றார். ஆனால் தமிழகத்தில் இன்று இருக்கிற முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும். காரணம், துரோகம்! துரோகம் அவர்களை காவு வாங்கும்.
வரும் காலத்தில் மாபெரும் வெற்றிகளை பெற்று அம்மா மீட்டெடுத்த ராயப்பேட்டை அலுவலகத்திற்கு வீரர்களாக செல்வோம். ஆர்.கே.நகரில் இந்த மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வாக்களியுங்கள் என்றுதான் கேட்டோம். 8 கோடி தமிழக மக்கள் சார்பில் அந்தக் கோரிக்கையை ஆர்.கே.நகர் மக்கள் நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.
ஆர்.கே.நகர் மக்கள் பணத்திற்காக விலை போகிறவர்கள் அல்ல. நீங்கள் கொடுத்த ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாயை தூக்கி எறிந்துவிட்டு எங்களை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இதுதான் மக்கள் மனநிலை. நிச்சயம் நமது சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதன் பிறகு சட்டமன்றத் தேர்தல் வந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்பது உறுதி.’ இவ்வாறு பேசினார்.