Advertisment

சமூகநீதி முழுமை அடையாது....தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தலைவர்கள் கோரிக்கை

பிகார் மாநிலத்தைப் போல தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
ttv

பிகார் மாநிலத்தைப் போல தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதி முழுமை அடையாது என்றும் பிகார் மாநிலத்தைப் போல தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் டி.டி.வி. தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Advertisment

நிதிஷ்குமார் தலைமையிலான பிகார் மாநில அரசு, அம்மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (ஓ.பி.சி) மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் பிரிவினர் (இ.பி.சி) அம்மாநில மொத்த மக்கள்தொகையில் 63% பேர் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பிகார் மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் அரசியல் கணக்குகளையும் அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகளையும் மாற்றும் என்ற விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் சமூகநீதி முழுமையடையாது என்றும் பிகார் மாநிலத்தைப் போல, தமிழகத்திலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “"கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவினருக்கும் போதிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும் என்பது பிஹார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 57வது வாக்குறுதியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எடுத்திட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என குறிப்பிட்டிருக்கும் நிலையில் அது தொடர்பாக எவ்வித முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு உரிய கால அவகாசத்தை, அடுத்து வந்த திமுக அரசு நீட்டிக்காத காரணத்தினால் அந்த ஆணையமும் செயலிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்துவதற்காகவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்காகவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது என்பதை உணர்ந்து, பிஹார் மாநிலத்தைப் போலவே தமிழகத்திலும் போதுமான நிதியை ஒதுக்கி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என தமிழக அரசை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தி.மு.க அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது பிஹார் மாநில அரசு. இதன்மூலம் சமூகநீதியைக் காப்பதில் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமையை பிஹார் அரசு வென்றெடுத்திருக்கிறது. இதற்குக் காரணமான பிஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கும் பாமக சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகநீதியைக் காக்கும் விஷயத்தில் தமிழகத்துக்கும், பிஹாருக்கும் இடையே எப்போதும் மறைமுகமான போட்டி நடந்து கொண்டே தான் இருக்கிறது. மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை, 1951-ம் ஆண்டில் மக்கள் போராட்டத்தின் மூலம் சாத்தியமாக்கியது தமிழகம் என்றால், தேசிய அளவில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கான மண்டல் ஆணையம் அமைக்கப்படுவதை 1978-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் பிஹார் மாநிலத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தி சாத்தியமாக்கியது பிஹார் மாநிலம் தான். சமூகநீதியைக் காப்பதில் தமிழகம் தடுமாறிக் கொண்டிக்கும் நிலையில், சமூகநீதியைக் காப்பதில் பிஹார் மாநிலம் மீண்டும் சாதித்திருக்கிறது.

பிஹார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அம்மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.10%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36%, பட்டியலினத்தவர் 19.7%, பழங்குடியினர் 1.70%, இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பினர் 15.50% இருப்பதும், சாதிகளைப் பொருத்தவரை யாதவர் சமுதாயம் 14.26% மக்கள்தொகையுடன் தனிப்பெரும் சாதியாக இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இது குறித்து விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க இருக்கும் பிஹார் மாநில அரசு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்பது குறித்தும் தீர்மானித்து செயல்படுத்தவுள்ளது. பிஹார் அரசின் இந்த முயற்சியும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிஹாருக்கு முன்பே கர்நாடகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், அதன் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மாறாக, பிஹார் அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவுகளையும் வெளியிட்டிருக்கிறது. அதன் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான பல்வேறு மாயைகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை; மத்திய அரசுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டு வந்தது; மத்திய அரசும் அதே நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால், மாநில அரசுக்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் உண்டு என்பதை பிஹார் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன்மூலம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். இதை பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

உண்மையில் கர்நாடகமும், பிஹாரும் நடத்துவதற்கு முன்பாகவே தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான தேவையும், கோரிக்கைகளும் தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கின்றன. 44 ஆண்டுகளுக்கு முன்பு 1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போது, அதில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சமூகத்துக்கும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான். ஆனால், அப்போதும், அதற்குப் பிறகும் வந்த தமிழக அரசுகள் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

வன்னியர் சங்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.வி. வெங்கடகிருட்டினன் தலைமையில் ஆணையம் அமைத்து ஆளுநர் அலெக்சாண்டர் ஆட்சியின் போது 1988-ம் ஆண்டு திசம்பர் 12-ம் நாள் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 1989-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அந்த ஆண்டின் பிப்ரவரி மாதமே அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது. அதுவே சமூகநீதிக்கு செய்யப்பட்ட பெருந்துரோகம். அதை இப்போதாவது திமுக தலைமையிலான அரசு சரி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,  “69% இடஓதுக்கீடு செல்லும்; ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும்” என்று ஆணையிட்டது. 
அப்போதே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு இயக்கத் தலைவர்களுடன் அப்போதைய முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 69% இடஓதுக்கீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப் பட்டுள்ளது. 69% இட ஒதுக்கீட்டை காக்க வேண்டும் என்றால் அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.

தமிழகத்தை ஆளும் தி.மு.க, சமூகநீதி தான் தனது தலையாயக் கொள்கை என்று கூறிவருகிறது. அதற்காக தேசிய அளவிலான அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறது. அத்தகைய அமைப்புக்கு சமூகநீதியை காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சட்டப்படியாக மட்டுமின்றி, தார்மீக ரீதியிலும் உண்டு. சமூகநீதி மீதான தனது பிடிப்பை மெய்ப்பிக்க வேண்டுமானால், தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டிய நெருக்கடி தி.மு.க அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியமில்லாத ஒன்றும் அல்ல. பிஹார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக ஒட்டுமொத்தமாக 45 நாட்கள் மட்டும் தான் செலவிடப் பட்டுள்ளன. அதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கும் குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்புப் பணியில் 2.64 லட்சம் பிஹார் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.

13 கோடி மக்கள்தொகை கொண்ட பிஹாரில் ரூ. 500 கோடிக்கும் குறைவான செலவில் 45 நாட்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிகிறது என்றால், 7.64 கோடி மட்டுமே மக்கள்தொகை கொண்ட தமிழகத்தில் இன்னும் குறைவான செலவில், குறைவான நாட்களில் இன்னும் சிறப்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும் என்பது உறுதி.

தமிழகத்தை ஆளும் திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். அதற்கான சிறந்தவழி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான்.எனவே, இனியும் தயங்காமல் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை வரும் 9-ம் தேதி தொடங்க விருக்கும் சட்டப்பேரவையின் துணை நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

பிகார் மாநிலத்தைப்போல தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு தலைவர் சேம். நாராயணன் வலியுறுத்தியுள்ளார்.

 தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கூட்டமைப்பு தலைவர் சேம.நாராயணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பிகார் முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சாதி மக்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசே இடஒதுக்கீட்டை எடுத்து சமூகநீதி அடிப்படையில் வழங்க வழிவகுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். இதற்காக இந்தியாவிலுள்ள தலைவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து கருத்தரங்குகள் நடத்தி வருகிறார். இது உள்ளபடியே விளிம்புநிலை மக்களின் எதிர்காலத்திற்கு பெரும் துணை நிற்கும்.

எனவே சமூகநீதியின் கதாநாயகனாக திகழும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பீகார் அரசை பின்பற்றி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுத்து வெளியிட வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எத்தனையோ சாதனைகள் செய்துள்ளார். இவை அத்தனைக்கும் சிகரம் வைப்பது போல் இந்த கணக்கெடுப்பு அமையும். வரலாறு உள்ளவரை நம்முடைய முதல்வரின் வரலாறும் இருக்கும் என்று 4 கோடி மிகவும் பிற்படுத்தப்பட்டோ மக்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்” என்று வலியுறுத்தியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment