முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுடன் சென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ராய் சந்தித்த பின்னர் வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையும் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிட்ட அறிக்கையும் மாறுபட்டிருப்பதால் இதில் எது உண்மை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் சென்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
ஆளுநரை சந்தித்த பின்னர், இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், “தமிழக மக்கள், கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவினை, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற விரைந்து அனுப்புமாறு தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.:” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “மருத்துவர் மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது ஏழை எள்ய மாணவர்களுக்கு பாதிப்புகளை எற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும் அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதலமைச்சர் அமைத்தார்கள்.
இக்குழுவானது நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்தும் மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களைத் தீர ஆராய்ந்தும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது.
இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 13.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு’ நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட முன்வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஆளுநரை முதலமைச்சர் இன்று (27.11.2021) நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இச்சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முதலமைச்சர் - ஆளுநர் சந்திப்பு குறித்து இன்று ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் முதலமைச்சருடன் நேற்று நடந்த சந்திப்பில் மழை வெள்ளம் மற்றும் கொரோனா பாதிப்புகள் குறித்து முதல்வருடன் ஆளுநர் விவாதித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மக்கள், கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவினை, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற விரைந்து அனுப்புமாறு தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியான செய்திக் குறிப்பில், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பற்றி எதுவுமே குறிப்பிடாமல், மழை வெள்ளம் மற்றும் கொரோனா பாதிப்புகள் குறித்து விவாதித்ததாக குறிப்பிட்டிருப்பது தமிழக அரசியலில் விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முதலமைச்சர் - ஆளுநர் சந்திப்பு குறித்து முதலமைச்சர் அலுவலகம் ஒரு விதமாகவும் ஆளுநர் மாளிகை வேறு விதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதில் எது உண்மை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “எது உண்மை? தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்பது குறித்து ஆளுநர் மாளிகை ஒருவிதமாகவும், முதலமைச்சர் அலுவலகம் வேறுவிதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப கோரியே இந்த சந்திப்பு நடந்ததாக முதலமைச்சர் தரப்பு தெரிவிக்க, அதைப்பற்றியே கண்டுகொள்ளாமல் கொரோனா குறித்து விவாதித்ததாக ஆளுநர் மாளிகை கூறியிருக்கிறது. அப்படி என்றால் உண்மை என்ன?
ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்து விடுவோம்' என்று தேர்தலுக்கு முன் ஏமாற்று வசனம் பேசிய தி.மு.க, அதனை செய்ய முடியாததால், இப்போது தமது வழக்கப்படி நாடகமாடுகிறதா?” என்று கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.