தேனி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனக்கு சொந்தமாக கார் இல்லை, வங்கிகளில் ரூ. 9.25 லட்சம் கடன் இருக்கிறது, அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டப்படி அரசுக்கு செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ. 28 பாக்கி உள்ளதாக தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழா கலைகட்டி வருகிறது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி மும்முனைப் போட்டி நிலவுகிறது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 27-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நடந்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தேனி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் வெளியாகி உள்ளது. டி.டி.வி தினகரன் தனது வேட்புமனுவில், தனக்கு சொந்தமாக ஒரு கார்கூட இல்லை என்றும் வங்கிகளில் ரூ.9.25 லட்சம் கடன் உள்ளதாகவும் அந்நிய செலாவணி சட்டப்படி அரசுக்கு செலுத்த வேண்டிய அபராதம் ரூ.28 கோடி பாக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம் வருமாறு:
டி.டி.வி. தினகரன் கையில், ரூ.54,825 ரொக்கம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், டி.டி.வி. தினகரன் தனக்கு ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்தி 87 ஆயிரத்தி 870 ரூபாய். (கடந்த 2012 - 2023 வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கு) என்று தெரிவித்துள்ளார்.
டி.டி.வி. தினகரனின் அசையும் சொத்து மதிப்பு ரூ.19,82,973 என்றும் அசையா சொத்து மதிப்பு ரூ.57,44,008 என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது பெயரில் வாகனம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதோடு, வங்கி உள்ளிட்ட இதர நிறுவனங்களில் உள்ள கடன் ரூ.9,25,029 உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல, அந்நிய செலாவணி ஒழுங்கு முறைச் சட்டப்படி அரசுக்கு செலுத்த வேண்டிய அபராத தொகை ரூ.28 கோடி பாக்கி உள்ளதாக டி.டி.வி. தினகரன் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மேலும், டி.டி.வி. தினகரன் தன் மீது, குற்ற வழக்குகள் 6, இதர வழக்குகள் 3. எந்த வழக்கிலும் தண்டனை இல்லை என்று வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“