இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என்றும் அதற்கான முகாந்திரம் இருக்கிறது என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 2017 ஏப்ரல் மாதம் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் டிடிவி தினகரன் ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுன ஆகியோர் நீதிமன்றக் காவலில் உள்ளனர். இந்த வழக்கில் டெல்லி குற்றவியல் பிரிவு போலீஸார் ஏற்கனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் இடைத்தரகர் சந்திரசேகருடன் சேர்ந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் முயன்றார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி அஜய் பரத்வாஜ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் மீது குற்றப்பதிவு செய்ய முகாந்திரங்கள் இருக்கின்றன. 120 பி குற்றச்சதி, ஐபிசி201 ஆதாரங்களை அளித்தல், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யலாம். இந்த வழக்கில் முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் போது, டிசம்பர் 4-ம் தேதி டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் நீதிமன்றக் காவலில் இருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது ஐபிசி 201 பிரிவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 120-பி ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் நீதிபதி உத்தரிவிட்டார்.
சிலரது சதியின் காரணமாக, இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்குதான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 17 November 2018
இது தொடர்பாக ட்விட்டரில் டிடிவி தினகரன் கூறுகையில், ''சிலரது சதியின் காரணமாக இரட்டை இலையைப் பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது . இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி இது பொய் வழக்கு தான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.