டி.டி.வி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்க துறையிடம் உள்ள ஆவணங்களை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்து அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, டி.டி.வி தினகரன் மீது 1996 ஆம் ஆண்டு அமலாக்கபிரிவு வழக்கு தொடர்ந்தது.
எழும்பூர் பொருளாதார குற்றபிரிவு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் அமலாக்கப்பிரிவு தரப்பு சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணையும் முடிவடைந்தது.
இந்நிலையில் லண்டன் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனது தரப்பு சாட்சிகள் 17 பேரை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும், இந்த வழக்கு குறித்து விசாரணை அதிகாரி இந்திய தூதுரத்திற்கு அனுப்பிய ஆவணங்களின் நகல்களை தன்னிடம் வழங்க கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டி.டி.வி. தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள வரை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தினகரனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
விசாரணையில் அமலாக்கதுறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் எனவே வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த மார்ச் 22 ஆம் தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி முரளிதரன், ஆவணங்களை வழங்க முடியாது எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாகவும், விசாரணைக்கு தேவையான ஆவணங்களை டி.டி.வி.தினகரனுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு தினகரன் மனுவை ஏற்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.