அதிமுக-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அ.தி.மு.க அறிவித்துவிட்டது. அது மட்டுமல்லாமல், ‘பாஜக-வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை’ என்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதனால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் பா.ஜ.க கூட்டணிக்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்தநிலையில் தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பிரிந்துள்ளது. ஜெயலலிதா பற்றி பேசும்போது அமைதியாக இருந்தவர்கள். இப்போது டெல்லி சென்று ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர் .அதுதான் கூட்டணி விரிசலுக்கு காரணமாக உள்ளதா அல்லது அதையும் தாண்டி வேறு காரணம் உள்ளதா என தெரியவில்லை. ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்சி தான் உண்மையான அதிமுக
தற்போது உள்ள கட்சி களவாடப்பட்ட அதிமுக., மக்கள் மத்தியில் தமிழகத்தை ஆளும் திமுக கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணி பலத்தால் வென்றனர். திமுக- காங்கிரஸ் கூட்டணி வென்றால் தமிழகத்திற்கு அனைத்தும் கிடைக்கும் என்றார்கள்.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர முடியவில்லை. இவர்கள் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்ற முடியாது. நானும் டெல்டாவை சேர்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காவிரி விவகாரத்தில், அவர்கள் கூட்டணி ஆட்சியான கர்நாடக காங்கிரசிடம் இருந்து நியாயத்தை பெற்றுத்தர முடியாமல் தோல்வியடைந்துள்ளனர். வருங்காலத்தில் நமது உரிமையை போராடித்தான் பெற முடியும். எனவே, தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் தருவோம் என்றார்கள். தற்போது உரிமைத்தொகை கிடைக்காத ஒவ்வொரு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இந்த ஆட்சி விடியல் தரும் ஆட்சி அல்ல, காமெடி ஆட்சி தான் நடக்கிறது.
சசிகலாவிடமிருந்து பன்னீர்செல்வம் பிரிந்து சென்றதால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். சசிகலாவுக்கும் நன்றி இல்லாமல் இருந்தார். நான்காண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. தயவில் ஆட்சியை நடத்தி வந்தார். தற்போது அவர்களுக்கும் உண்மையாக இல்லை என புரிந்து இருக்கும்.
மத்தியில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைந்தாலும் மாநிலத்தின் உரிமைகளுக்கு மாநில கட்சிகள் தான் போராட முடியும். அதேபோல் பாராளுமன்றத் தேர்தலிலும் மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்கும்போது தான் தட்டிக் கேட்க முடியும்.
இரட்டை இலை மட்டும் இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மூட்டையிலிருந்து விழும் நெல்லிக்காய் போல சிதறும்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம். அப் போது தான் உள் ஒதுக்கீடு செய்ய முடியும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பர வெளிச்சத்தில் ஆட்சி நடத்தி வருகிறார். இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் எதையும் அவர்கள் செய்யவில்லை. திமுக திருந்தாது என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு அதிக அளவில் விலை பேசிய சாமியாரின் செயல் காட்டுமிராண்டித்தனம். வரும் 2026-ல் நடைபெற விருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக அமமுகவுக்கு மக்கள் அமோக ஆதாரவு அளிப்பார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம். அப்படி வாய்ப்பு இல்லை என்றால் தனித்து போட்டியிட முடிவு செய்வோம். வருகின்ற டிசம்பர், ஜனவரியில் எங்களது முழு நிலைப்பாட்டை தெரிவித்து விடுவோம் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது டி.டி.வி.யுடன், மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“