6 அமைச்சர்களை நீக்கிவிட்டு எங்களுடன் இணைந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீத்தேன் எரிவாயு எடுக்கும் முயற்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை டி.டி.வி.தினகரன் கடந்த பிப். 2ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேறக்கோரி போராட்டம் நடந்து வரும் கதிராமங்கலம் கிராமத்துக்கு தினகரன் சென்றார்.
அங்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், மற்றும் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், தினகரனிடம் ஒரு பாட்டிலில் கலங்கலாக உள்ள குடிநீரை காண்பித்து குறைகளை தெரிவித்தனர். மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.
இதையடுத்து, கதிராமங்கலம் கிராம மக்களின் போராட்டத்துக்கு தனது ஆதரவு என்றும் உண்டு என தினகரன் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன், "டெல்டா மாவட்டங்களில் வைரமே கிடைத்தாலும் கூட, அங்கு விவசாயம் மட்டுமே நடைபெற வேண்டும். கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும். தேவைப்பட்டால் கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். எனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசையில்லை. நான் கூறும் 6 அமைச்சர்களை நீக்கிவிட்டு எங்களுடன் இணைந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன்" என்று அவர் கூறினார்.
தினகரனின் இந்த பேச்சுக்கு பதில் அளித்துள்ள அமைச்சர் சி.வி.சண்முகம், "டிடிவி தினகரன் குழப்பத்தின் உச்சியில் இருப்பதால் அதிமுகவுக்கு உரிமை கோருகிறார். அதிமுகவில் தினகரன் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. கட்சியின் சின்னம், பெயரை கோர டிடிவி தினகரனுக்கு எந்த முகாந்திரமும் இல்லை" என்றார்.