டிடிவி தினகரனுக்கு எதிராக ஜெயானந்த் கொந்தளித்து தீர்த்தார். ‘திட்டமிட்டு புறக்கணித்தால் எப்படி பொறுப்போம்?’ என கேள்வி எழுப்பினார்.
டிடிவி தினகரன் - திவாகரன் இடையிலான மோதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவின் சகோதரரான திவாகரன் ஆட்சியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக.வுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக டிடிவி தினகரன் அணியின் வெற்றிவேல் குற்றம் சாட்டினார்.
திவாகரன் இதற்கு பதில் கூறுகையில், ‘டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் அம்மா அணியாக இயங்குவோம்’ என கூறியிருக்கிறார். டிடிவி தினகரனோ, ‘எனக்கு உறவினர்களைவிட கட்சி முக்கியம்’ என்கிறார். இதில் சசிகலாவின் ஆதரவு டிடிவி தினகரனுக்கா, திவாகரனுக்கா? என்கிற கேள்வியும் எழுந்து நிற்கிறது.
இதற்கிடையே டிடிவி தரப்புக்கு எதிராக இன்று (ஏப்ரல் 25 ) திவாகரன் மகன் ஜெயானந்த் அடுத்தடுத்து முகநூலில் பதிவுகளை வெளியிட்டார். முதல் பதிவில், ‘சின்னம்மா, திவாகரனுக்கு பிறந்த நாள் முதல் சகோதரர்... ஒன்றாக வளர்ந்தவர்கள்...அக்காவை திட்டாத தம்பி உலகில் கிடையாது...இதை கூடப் பெரிதாக்க வெற்றிவேல் கரவம்கட்டுவது ஏனோ?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஜெயானந்த் அடுத்த பதிவில், ‘அ.தி.மு.க வரலாற்றில் M.N என்று ஒரு chapter உண்டு. அதுபோல குடும்பத்தில் ஒரு சிலருக்கு உண்டு. நான் கேட்கும் கேள்வி :- கழகத் தொண்டனாய் செயல் பட்ட ஒரு சிலருக்கு சின்னம்மா குடும்பம் என்ற பட்டத்தை தலையில் கட்டி , குடும்ப அரசியல் என டாடா காட்ட வெற்றிவேல் துடிக்க காரணம் என்ன? எங்களை திரைமறைவில் அசிங்கபடுத்தினால் நாங்கள் தவறான வழி எடுப்போம் என கனவு கண்டு சின்னம்மா குடும்பத்தை சிதைத்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களை சொல்லி ஒன்னும் ஆகாது. தூண்டுபவர்களை சொல்ல வேண்டும்.’ என குறிப்பிட்டிருக்கிறார்.
ஜெயானந்த் இன்னொரு பதிவில், ‘எனது தந்தைக்கு பதவி ஆசை இருந்திருந்தால் TTV யுடன் ஒரு வருடத்திற்கு முன்பு சேர்ந்தே இருக்க மாட்டார். வந்தவரை அரவணைக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை. திட்டமிட்டு புறக்கணித்தால் அவர் எப்படி பொருத்திருப்பார். அவர் என்ன சிறுவனா?’ என கேட்டிருக்கிறார்.
மற்றொரு பதிவில், ‘சின்னம்மா மீது உள்ள களங்கத்தை TTV தான் துடைத்தார் என கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. சின்னம்மா மத்திய அரசாங்கத்திற்கு பணியாமல் சிறை சென்ற அனுதாபம், சின்னம்மாவின் பக்கபலம் மற்றும் அம்மா அவர்கள் சின்னம்மாவை எடுக்க சொன்ன வீடியோ- இவை மூன்றும் தான் TTV -யை கரைசேர்த்தன. ஆர்.கே நகரில் வென்ற துணிச்சலில் வெற்றிவேல் பேசுவது எதிர்காலத்தில் பாதகமாகிவிடும்.’ என கூறியிருக்கிறார் ஜெயானந்த்.
இரு தரப்பும் அடுத்தடுத்து பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.