டிடிவி தினகரன் அடுத்த ‘ஷோ’வுக்கு தயாராகிவிட்டார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முதல் போராட்டம் மார்ச் 25-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரதமாக நடக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆறு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைத்திடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி,தஞ்சை மாநகரில் வருகின்ற 25.03.2018 அன்று காலை 08.00 மணிமுதல் மாலை 05.00 மணிவரை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் pic.twitter.com/MRccq2Ckm3
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 17 March 2018
டிடிவி தினகரன், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை மார்ச் 15-ம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அதில் திரண்ட பெரும் கூட்டம் அரசியல் பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஞாயிற்றுக் கிழமை அல்லாத ஒரு நாளில் காலை 9 மணிக்கு அவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்டியது எப்படி? என புரியாமல் பல அரசியல் கட்சிகளும் திகைப்பது நிஜம்!
டிடிவி தினகரன் தனது அடுத்த ‘ஷோ’வை தஞ்சாவூரில் நிகழ்த்தி காட்ட இருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மார்ச் 25-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூரில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இன்று (மார்ச் 17) மாலை வெளியிட்ட அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் தினகரன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 17 March 2018
டிடிவி தினகரன், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கிய பிறகு நடத்தும் முதல் போராட்டம் இது! அதுவும் அவரது கட்சியின் கோட்டையாக டிடிவி கருதும் தஞ்சாவூரில் இந்தப் போராட்டம் நடைபெற இருப்பதால் மற்றொரு மாநாடாக இதில் பிரமாண்டம் காட்ட இருக்கிறார்கள் டிடிவி கட்சியினர்.
டிடிவி தினகரன் தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்கும் அதே நாளில்தான் ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. எனவே அன்று பெரும் கூட்டம் திரள இருப்பது ஈரோட்டிலா, தஞ்சையிலா? என்றும் பட்டிமன்றம் ஆரம்பமாகிவிட்டது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகிய அதே நாளில் முதல் போராட்டத்தையும் அறிவித்து நாஞ்சில் சம்பத் விலகலின் முக்கியத்துவத்தையும் தினகரன் குறைக்க முயன்றிருக்கிறார். இரு கட்சிகளின் ஜனத் திரட்டு அரசியல் அரங்கில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.