டிடிவி தினகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டது. பதவி பறிக்கப்பட்ட அமமுக நிர்வாகி ஒருவர் உருவப் பொம்மை எரிக்க வந்ததால் இந்த நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.
டிடிவி தினகரன் வசிக்கும் அடையாறு இல்லத்தில் இன்று (ஜூலை 29) பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் விசாரணைக்கு பிறகு, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த புல்லட் பரிமளத்தை கட்சிப் பதவியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கியதாகவும், அந்தக் கோபத்தில் அவர் தினகரனனின் உருவப் பொம்மை எரிக்க காரில் கிளம்பி வந்ததாகவும், அப்படி எரிக்க முயன்றபோது தீப்பற்றியதாகவும் தெரிய வந்தது.
இந்த நிகழ்வில் புல்லட் பரிமளம் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர், இது குறித்து அடையாறு துணை ஆணையர் அளித்த விளக்கம்: காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லட் பரிமளம் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரை டிடிவி தினகரன் அமமுக.வை விட்டு நீக்கியுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரன் இல்லம் முன்பு கோஷம் எழுப்பிய புல்லட் பரிமளம் தனது ஓட்டுனர் சுப்பையா என்பவருடன் சேர்ந்து தனது காரை பெட்ரோல் ஊற்றி எரித்து, கற்களை கொண்டு தாக்கியுள்ளார். இதனால் பரிமளத்திற்கு சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுனர் சுப்பையாவை பிடித்து விசாரணை செய்து வருகிறோம். இவ்வாறு
துணை ஆணையர் செஷாங் சாய் விளக்கம் அளித்தார். டிடிவி தினகரன் வீடு முன்பு உருவப் பொம்மை எரிக்க முயன்றபோது தீப்பற்றியது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.
முன்னதாக வந்த செய்தி:
டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவரது வீடு, சென்னை அடையாறு கற்பகம் கார்டன் பகுதியில் இருக்கிறது.
டிடிவி தினகரன் இன்று (ஜூலை 29) தனது இல்லத்தில்தான் இருந்தார். பகல் 1 மணியளவில் காரில் வந்த மர்ம நபர்கள் அவரது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் டிடிவி தினகரனின் கார் டிரைவர் பாண்டிதுரை, புகைப்பட நிபுணர் ஒருவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
டிடிவி தினகரன் வீட்டில் இருந்தபோதே இந்த தாக்குதல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த மூவரும் அடையாறு மலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
டிடிவி தினகரன் கட்சிக்குள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் உள்கட்சி விவகாரமே இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கு காரணம் என கூறப்படுகிறது. போலீஸார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.