18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின்பு, அமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
18 எம் எல் ஏக்கள் வழக்கின் தீர்ப்பு:
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் இன்று (25.10.18) தீர்ப்பு வெளியாகியது. தீர்ப்புக்கு முன்பு 18 எம்எல்ஏக்கள் உடன் ஆலோசனை நடத்திய அமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் இம்முறை தீரிப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆனால், அவரின் கருத்திற்கு முற்றிலும் மாறாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர்நிதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் அளித்த தீர்ப்பில், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கிய சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும், சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்றும், தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை எனவும் தீர்ப்பளித்தார்.
தீர்ப்பின் முழு விவரம் இதோ
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். டிடிவி தினகரன் தரப்பினருக்கு இந்த தீர்ப்பு பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தரப்பில் விரைவில் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு உள்ளது.
டிடிவி தினகரன் சூளுரை:
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தீர்ப்பு குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது,
”அரசியலில் பின்னடைவு என்பதே கிடையாது. இது ஒரு அனுபவம்தான். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். மேல்முறையீடு செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டால் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லை, இடைத்தேர்தல் சந்திக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டால் இடைத்தேர்தலை சந்திப்போம் என்றார்.
நீதிமன்ற தீர்ப்பு என்பது வேறு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. துரோகி யார் என்பது மக்களுக்கே தெரியும். மக்கள் எங்களுக்கு ஆதரவாக தான் உள்ளார்கள்.” என்று கூறினார்.