முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்டது.
ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்பாக டிசம்பர் 4-ம் தேதி பிற்பகல் 3.30 - 3.50 மணியளவில் ஜெயலலிதா இறந்ததாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்தது டிசம்பர் 5-ம் தேதி இல்லை, டிச. 4-ம் தேதி என்று ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “சட்டசபையில் சபாநாயகருக்கு தான் அதிகாரம் அதிக அளவில் உள்ளது. ஆனால் நாற்காலி பிரச்சனைக்காக எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம். சபாநாயகரின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி பதட்டத்தில் இருக்கிறார். முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் உடன் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசி உள்ளார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார். அது உண்மை என்றால் அதற்கான ஆதாரத்தை அவர் காண்பிக்கட்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஒரு முதலமைச்சருக்கு முக்கிய பிரச்சினைகள் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவர் டி.வி.யில் பார்த்து நிலைமையை தெரிந்து கொண்டேன் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிபதி தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தவறு செய்தது யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
24 மணி நேரம் கழித்து டாக்டர்கள் எல்லாம் பார்த்த பின்னர்தான் ஜெயலலிதாவின் மரணத்தை இரவு டிக்லர் செய்தார்கள். இதுதான் இயற்கையிலேயே நடந்தது. கார்டியாக் அரெஸ்ட் நிகழ்ந்ததையே மரணம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆணையம் சொல்கிறது என்றால் ஒரு நீதியரசரை நாம் குறை சொல்லக்கூடாது. அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர். ஆனால் அவருடைய அறிக்கை ஒரு அரசியல்வாதி எழுதியதைப் போன்று இருந்தது.வருத்தமாக இருக்கிறது.
ஒரு பெரிய தலைவருடைய மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என ஒரு பொய்யான பிரச்சாரத்தை திமுக தொடங்கியது உங்களுக்கு தெரியும். அதை ஓபிஎஸ் கையில் எடுத்தார். அதைத் தொடர்ந்து ஓபிஎஸ்சும் எடப்பாடி பழனிச்சாமியும் ஒரு அக்ரிமெண்ட்க்காக அந்த ஆணையத்தை வைத்தார்கள். மக்களின் வரிப்பணம் வீணானதாக அன்றிலிருந்து நான் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். ஜெயலலிதாவின் மரணம் என்பது இயற்கையானது. இதற்கு எத்தனை அறிக்கை கொடுத்தாலும் உண்மை அதுதான். ஒரு வேலை நீதிமன்றத்திற்கு சென்றால் ஆணையத்தின் அறிக்கையே நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகலாம்.
ட்ரீட்மென்ட் என்பது அந்த காலகட்டத்தில் அவருக்கு எது சரி என்று படுகிறதோ அதை கொடுப்பார்கள். ஆஞ்சியோ பண்ண ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அவரது உடல்நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கிறது. இது மருத்துவர்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. ஜெயலலிதா இருந்த அறையில் அவருக்கு கார்டியாடிக் அரெஸ்ட் ஆனதும் மருத்துவர்கள் வந்து ஷாக் ட்ரீட்மென்ட் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். அப்பொழுது எக்மோ பொருத்தும் போது ரத்தம் வந்திருக்கிறது. நான் அங்கு சென்று பார்க்கவில்லை. ஓபன் ஹார்ட் சர்ஜரி எல்லாம் அங்கு பண்ணல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு சொல்வார்கள். அதெல்லாம் ஆபரேஷன் தியேட்டரில் தானே பண்ணுவார்கள். டாக்டர்களெல்லாம் இன்னொருத்தர் கூட சேர்ந்து கொண்டு சதி செய்வார்களா?” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"