டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்து கூறி அமைச்சர் உதயகுமார் ட்விட்டர் பதிவு வெளியிட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது போலியானது என அமைச்சர் புகார் கூறியிருக்கிறார்.
டி.டி.வி.தினகரன் அளிக்கும் பேட்டிகளில், ‘இபிஎஸ்-ஓபிஎஸ் அணியில் தங்களது ‘ஸ்லீப்பர் செல்’ இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார். இதனால் அமைச்சர்களாக, எம்.எல்.ஏ.க்களாக இருக்கிற பலரையும் ஆளும்கட்சி வட்டாரத்திலேயே சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் சூழல் நிலவுகிறது.
டி.டி.வி.தினகரனை எதிர்த்து ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட மதுசூதனன் தோல்விக்கும் இந்த ‘ஸ்லீப்பர் செல்’களின் பங்களிப்பு காரணம் என பேசப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மதுசூதனன் தலைமைக்கழகம் வந்தபோது வட சென்னை மகளிர் அணியினர் இதைக் குறிப்பிட்டு மதுசூதனனுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
இதற்கிடையே வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பெயரிலான ட்விட்டர் பக்கம் ஒன்றில் அடுத்தடுத்து, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பதிவுகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சசிகலாவை அதிமுக.வின் பொதுச்செயலாளர் பதவிக்கும், முதல்வர் பதவிக்கும் முதன்முதலில் முன்மொழிந்து ஜெயலலிதா நினைவிடத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் உதயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 18-ம் தேதி ஆர்.பி.உதயகுமார் பெயரிலான ட்விட்டர் பக்கத்தில், ‘டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வாழ்த்துகள்’ தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது ட்விட்டர் பக்கத்தை யாரோ ‘ஹேக்’ செய்து அந்தப் பதிவை வெளியிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார் அமைச்சர் உதயகுமார்.
அமைச்சரின் ட்விட்டர் கணக்கை ‘ஹேக்’ செய்து அப்படி முறைகேடாக பதிவு செய்தவர் யார்? என்பதை இத்தனை நாட்கள் ஆகியும் சைபர் கிரைம் போலீஸார் கண்டு பிடிக்கவில்லை. இந்தச் சூழலில் டிசம்பர் 25-ம் தேதி (நேற்று), ‘ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனுக்கு வாழ்த்துகள்’ தெரிவித்து உதயகுமாரின் பெயரிலான ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவு வெளியானது. அதிமுக வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து இன்று (26-ம் தேதி) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆர்.பி.உதயகுமார் கொடுத்த புகார் மனுவில், ‘கடந்த முறை நான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுத்து வருவதை அறிவேன். இன்று மற்றுமொரு செய்தி மேற்படி சுயேட்சை வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்ததாக வெளியிடப்பட்டிருக்கிறது. எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் வெளியான இந்தச் செய்தியை நீக்கி, அதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்’ என மனுவில் கூறியிருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
அமைச்சரின் ட்விட்டர் கணக்கை ‘ஹேக்’ செய்தது பற்றி ஏற்கனவே புகார் கொடுத்த பிறகும், 10 நாளில் 2-வது முறையாக அதேபோன்ற நிகழ்வு அரங்கேறியிருப்பது அதிர்ச்சிதான்!