Advertisment

டி.டி.வி.தினகரன் முதல்வராம்... இபிஎஸ்-ஓபிஎஸ் துணை முதல்வர்களாம்! அதிமுக.வில் சீக்ரெட் பிரசாரம்

டி.டி.வி.தினகரன் டிசம்பர் 29-ம் தேதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்கிறார். அவர் சட்டமன்றம் வர இருப்பதைத் தொடர்ந்து அதிமுக.வில் சலசலப்பு ஆரம்பமாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ttv dhinakaran..,,

டி.டி.வி.தினகரன் டிசம்பர் 29-ம் தேதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்கிறார். அவர் சட்டமன்றம் வர இருப்பதைத் தொடர்ந்து அதிமுக.வில் சலசலப்பு ஆரம்பமாகிறது.

Advertisment

டி.டி.வி.தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றார். ஏற்கனவே டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிதாக சுயேட்சையாக டி.டி.வி.தினகரன் சட்டமன்றம் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

டி.டி.வி.தினகரன் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக டிசம்பர் 29-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்கிறார். தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். ஜனவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு ஆளுனர் உரைக்காக சட்டமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்கிறார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களில் பலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலையில் இருந்தாலும், அவர்களில் பலர் டி.டி.வி.தினகரன் மீதும் அன்பு கொண்டவர்கள். எனவே சட்டமன்றத்தில் டி.டி.வி.தினகரனுடன் அவர்கள் இணக்கமாக செயல்படுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்துவிட்டதாக கூறப்பட்டாலும், மறைமுகமாக அவர்களுக்கு இடையே பனிப்போர் தொடர்கிறது. அதிமுக.வுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், இரு துணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் திட்டமிட்டபடி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

அதிமுக செய்தி தொடர்பாளர்கள் குழு உறுப்பினர்கள் அனைவரையும் மீடியாவுக்கு செல்லவேண்டாம் என இபிஎஸ்.ஸும், ஓபிஎஸ்.ஸும் உத்தரவிட்டனர். புதிய செய்தி தொடர்பாளர்களை நியமிக்க இருப்பதாகவும் கூறினர். ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் அப்படியொரு நடவடிக்கையை தலைமை எடுத்ததை தொண்டர்கள் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். புதிய செய்தி தொடர்பு குழு உறுப்பினர்களை இன்னும் நியமிக்க முடியவில்லை.

டிடிவி தினகரன் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், கலைராஜன், பார்த்தீபன், தங்க தமிழ்செல்வன், ரங்கசாமி, பாப்புலர் முத்தையா ஆகிய 6 பேரை நீக்க தாமதம் செய்ததுகூட, அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதுதான். இபிஎஸ் அணிக்கும் ஓபிஎஸ் அணிக்கும் இடையே நிர்வாகிகளை நியமிப்பதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது அவ்வளவு சுலபமான விஷயமில்லை.

தவிர, இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக, டெல்லி அதிகார வர்க்கத்திற்கு அடிமையாக இருப்பதாக விமர்சனங்கள் இருக்கின்றன. தமிழக பாஜக தலைவர்கள் மாநில அரசு மீது வைக்கும் விமர்சனங்களுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. தமிழக வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஆளுனர் மாவட்டம் வாரியாக சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார். அதை அரசு தரப்பால் தட்டிக் கேட்க முடியவில்லை.

ஆளுனரே ஓகி பாதிப்பை பார்வையிட்டு, டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து நிதி கேட்கிறார். இதெல்லாம் தமிழக ஆட்சித் தலைமை செயல்படாமல் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. இது எல்லாம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்விக்கும், டிடிவி தினகரன் வெற்றிக்கும் இதுவும்கூட ஒரு பின்னணிதான்.

இந்தச் சூழலில் சட்டமன்றத்திற்குள் டிடிவி தினகரன் நுழைவது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக.வை ஜெயலலிதா பாணியில் கட்டிக்காக்க டிடிவி தினகரனால்தான் முடியும் என அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பிரசாரம் நடந்து வருகிறது. டிடிவி தினகரனை முதல்வர் ஆக்கலாம் என்றும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் துணை முதல்வர்களாக பொறுப்பேற்கலாம் என்றும் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது.

இது உடனே சாத்தியமாகாமல் இருக்கலாம். ஆனால் இந்தக் கருத்து வலுப்பெற்றால், எடப்பாடி அரசுக்கு ஆபத்தாக முடியலாம். எனவே டிடிவி தினகரனின் சட்டமன்ற பிரவேசம் அரசியல் பரபரப்பு திருப்பங்களை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment