டிடிவி தினகரனின் புதிய கட்சிப் பெயரில் ‘திராவிடம்’ மிஸ் ஆனது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எம்.ஜி.ஆர். பெயரையும் இணைத்திருக்கலாம் என்கிறார்கள் வேறு சிலர்!
டிடிவி தினகரன் புதிய கட்சியை இன்று (மார்ச் 15) மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். புதிய கட்சி என்கிற பெயரை அவர் தனது பேச்சில் பயன்படுத்தவில்லை. ஏற்கனவே இருக்கிற அமைப்புக்கு புதிய பெயர் என்று குறிப்பிட்டார். அதிமுக.வை மீட்க இந்த புதிய அமைப்பு ஒரு தற்காலிக ஏற்பாடு என்றும் விளக்கினார்.
டிடிவி தினகரன் இப்படி குறிப்பிடுவது ஒரு அரசியல் வியூகமே தவிர, வேறல்ல! காரணம், புதிய கட்சி என்று சொன்னால் அதிமுக தொண்டர்கள் அதில் இணைய தயக்கம் காட்டலாம் என்பது அவரது எண்ணமாக இருப்பதாக தெரிகிறது. மற்றபடி எந்த ஒரு அமைப்பை தேர்தல் ஆணையத்தில் புதிதாக பதிவு செய்தாலும், அது ஒரு பதிவு செய்யப்பட்ட புதிய கட்சியாகவே கருதப்படும்.
டிடிவி தினகரன் பெயர் சூட்டியிருக்கும், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பும் தேர்தல் ஆணையத்தில் பதிவான அடுத்த நிமிடமே புதிய கட்சி ஆகிவிடும். அதற்கு மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்குவதாகவும் தொடக்க விழாவிலேயே அறிவித்து, விண்ணப்ப படிவங்களையும் வினியோகம் செய்தார்.
டிடிவி தினகரன் தனது புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கைக்கு இவ்வளவு மும்முரமாக இறங்குவதில் இருந்தே இது தற்காலிக ஏற்பாடு இல்லை என்பதும், இந்தக் கட்சியை தொடர்ந்து நடத்தவேண்டிய சூழல்தான் அமையும் என்பதையும் அவர் கணித்துவிட்டார் என்றே கருத வேண்டியிருக்கிறது.
டிடிவி தினகரன் அண்மைகாலமாக தமிழ் அமைப்புகளுடன் நெருக்கம் காட்டி வருகிறார். மீத்தேன் எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு ஆகிவற்றையும் அதிகம் பேசுகிறார். பெரியாரையும், அண்ணாவையும் மேலூர் கூட்டத்தில் சுட்டிக்காட்டி பேசினாலும்கூட, ‘திராவிட’ என்கிற நிலையில் இருந்து தமிழ் தேசிய அரசியலை நோக்கி டிடிவி நகர்வதற்கான தடயங்கள் அவரது செயல்பாடுகளில் இருக்கின்றன.
புதிய கட்சியின் பெயரில் அதனாலேயே திராவிடத்தை அவர் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் ஜெயலலிதாவை குறிப்பிடும் விதமாக ‘அம்மா’ என்கிற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது. எம்.ஜி.ஆர். பெயரை கட்சிப் பெயரில் இணைத்திருக்கலாம் என்கிற கருத்து பலரிடம் இருக்கிறது.
அல்லது கட்சிக் கொடியில் ஜெயலலிதா படத்தை மட்டும் இடம் பெறச் செய்திருக்கும் டிடிவி தினகரன் கூடவே எம்.ஜி.ஆர். படத்தையும் சேர்த்திருக்கலாம் என்கிற கருத்தும் இருக்கிறது. இன்னும்கூட சில மாற்றங்களை செய்ய அவகாசம் இருக்கிறது. டிடிவி தினகரன் செய்வாரா? என்பதுதான் தெரியவில்லை.