டிடிவி தினகரன், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கட்சி தொடங்குவதால் அதில் இணைவதில் எங்களுக்கு சட்ட சிக்கல் இல்லை என தங்க தமிழ்செல்வன் கூறினார்.
டிடிவி தினகரன், மார்ச் 15-ம் தேதி மதுரை மேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்த இருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறார். அவருக்கு குக்கர் சின்னத்தை வழங்கவும், அவர் குறிப்பிட்ட 3 பெயர்களில் ஒன்றை கட்சிப் பெயராக வைக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இந்த முடிவுக்கு அவர் வந்திருக்கிறார்.
டிடிவி தினகரன் அணியில் உள்ள பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் இந்த புதிய கட்சியில் இணைய முடியுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால் அவர்கள் 18 பேரும் தங்களை அதிமுக எம்.எல்.ஏ.க்களாக உரிமை கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வரவில்லை. புதிய கட்சியில் இவர்கள் இணைந்த பிறகு, உயர் நீதிமன்றத் தீர்ப்பு இவர்களுக்கு சாதகமாக வந்தால் இவர்கள் எப்படி அதிமுக எம்.எல்.ஏ.க்களாக செயல்பட முடியும்? என்கிற கேள்வி எழும்.
டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்குவது குறித்து சென்னையில் நேற்று முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் செந்தில் பாலாஜி, பழனியப்பன், ரெங்கசாமி உள்பட 7 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மட்டும் கலந்து கொண்டனர். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றி வேல் உள்பட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏக்கள் பங்கேற்க வில்லை.
டி.டி.வி. தினகரன் தனிக் கட்சி தொடங்குவதால் கூட்டத்தை புறக்கணித்தீர்களா? என்று தங்க தமிழ் செல்வனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: நாங்குநேரில் பொதுக் கூட்ட நிகழ்ச்சி இருந்ததால் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் நான் பங்கேற்க முடியவில்லை.
டி.டி.வி. தினகரன் தனிக் கட்சி ஆரம்பிப்பது தற்காலிக ஏற்படாக கோர்ட்டு உத்தரவின்படிதான் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பதுதான் எங்களது நோக்கமாகும். இது சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் நிலுவையில உள்ளது. இடைக்கால ஏற்பாடாக தேர்தலில் போட்டியிடும் வசதிக்காக புதிதாக கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அனைத்திந்திய அம்மா அண்ணா தி.மு.க., எம்.ஜி.ஆர். அம்மா தி.மு.க., எம்.ஜி.ஆர். அம்மா தி.க. ஆகிய 3 பெயரில் ஒரு பெயரை கட்சிக்கு தேர்ந்தெடுத்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்யலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. கோர்ட்டு உத்தரவின் பேரில் தினகரன் புதிய பெயரில் கட்சி தொடங்குவதால் அதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் நாங்கள் சேருவதால் எந்த பாதிப்பும் வராது. எங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது. இவ்வாறு அவர் கூறினார்.