TTV Dhinakaran Offer to Congress:
டிடிவி தினகரன் முதல் முறையாக காங்கிரஸுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்திருக்கிறார். இதற்கு திருநாவுக்கரசர் என்ன பதில் சொல்லப் போகிறார்?
டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். தமிழகத்தில் குறிப்பிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம், பேரணி என நடத்தி தனது பலத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே.சசிகலாவை இன்று (ஆகஸ்ட் 2) சந்திக்க சென்ற டிடிவி தினகரன் வெளியே வந்து நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வந்தால், அந்தக் கட்சியுடன் கூட்டணி குறித்து பரிசீலிக்கத் தயார் ( TTV Dhinakaran Offer to Congress ).
பாஜக.வுடன் நாங்கள் கூட்டணி அமைக்க மாட்டோம்’ என குறிப்பிட்டார்.
திருநாவுக்கரசர் என்ன செய்வார்?
காங்கிரஸ் கட்சிக்கு டிடிவி தினகரன் வெளியிட்ட முதல் பகிரங்கமான அழைப்பு இது! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான திருநாவுக்கரசர், டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் மேலிடம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டவர்கள் கூறி வருகிறார்கள்.
இந்தச் சூழலில் டிடிவி தினகரனின் அழைப்புக்கு திருநாவுக்கரசர் எப்படி ரீயாக்ட் செய்யப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.
‘நாங்கள் திமுக அணியில் இருக்கிறோம்’ என்கிற ரீதியில் பதில் கூறி முடித்துக் கொள்வாரா? அல்லது, டிடிவி தினகரனுடன் கூட்டணி இல்லை என வெளிப்படையாக திருநாவுக்கரசர் அறிவிப்பாரா? என காங்கிரஸில் அரசரின் எதிர் கோஷ்டியினரும், திமுக.வினரும் காத்திருக்கிறார்கள்.
டிடிவி தினகரனின் இந்தப் பேட்டி காங்கிரஸுக்கு வேறொரு வகையிலும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு இருப்பதாக காட்டிக்கொண்டு திமுக அணியில் அதிக சீட்களை பெற்றுக்கொள்ளும் திட்டம் காங்கிரஸிடம் இருந்தது.
இப்போது வெட்டு ஒன்று, துண்டு ரெண்டாக பதில் சொன்னால், திமுக அணியில் அப்படி கூடுதல் இடங்களை பெற முடியுமா? என்கிற கலக்கம் காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் சிலருக்கு இருக்கிறது.
ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பு இதில் அதிரடியாக டிடிவி தினகரன் அழைப்பை நிராகரிக்க விரும்புகிறார்கள். ஒருவேளை திருநாவுக்கரசர் பதில் கூறாவிட்டால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் இருந்து காட்டமான பதில் வரும் என தெரிகிறது. இந்த நகர்வுகளை திமுக வெகு உன்னிப்பாக கவனித்து வருகிறது.