மத்திய அரசின் கைக்கூலியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
டி.டி.வி.தினகரன், டெல்டா மாவட்டங்களில் இருந்து ‘மக்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியை தொடங்கியிருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தமிழக மக்களின் நலனுக்கு எதிரான பல திட்டங்களை ஜெயலலிதா தடுத்தி நிறுத்தி வைத்தார். ஆனால் இப்போதைய தமிழக அரசு மத்திய அரசிடம் பயந்து கொண்டு அந்த திட்டங்களை எல்லாம் தமிழகத்தில் செயல்படுத்தி தமிழக மக்களுக்கு எதிராக மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கைக்கூலியாகவும், பினாமி அரசாகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் செயல்படுவதாக கூறுகின்றனர். ஜெயலலிதா இருந்த வரை பொதுமக்களை பாதிக்கும் பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தார், ஆனால் அவருடைய பெயரை கூறி ஆட்சி நடத்தும் தமிழக அரசு பஸ் கட்டணத்தை 60 சதம் உயர்த்திவிட்டு கண்துடைப்புக்காக 5, 10 பைசாவை மட்டும் குறைத்துள்ளது. பஸ் கட்டண உயர்வால் அடிதட்டுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தினை குறைக்க வேண்டுமானால் மத்திய அரசு டீசலுக்கான சுங்க வரியை குறைத்தால் போதும், போக்குவரத்து கழகம் லாபத்தில் செயல்படும். இதனை தமிழக அரசு தான் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளின் துயரங்களை உணர்ந்த ஜெயலலிதா உச்சநீதிமன்றம் சென்று காவிரி நடுவர் மன்றம் அமைத்து அதன் மூலம் சட்டப் போராட்டம் நடத்தி காவிரியில் நமக்கு உரிய தண்ணீரை பெற்று தந்தார்.அதன் மூலம் வருடா வருடம் நமக்கு தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது காவிரி டெல்டாவில் நெற் பயிர் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. தமிழக முதல்வர் நமக்கு உரிய தண்ணீரை நீதிமன்றம் மூலம் கேட்டு பெறாமல், கர்நாடக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுக் கொண்டு இருக்கிறார். தமிழக அரசு திட்டங்களில் மத்தியஅரசு பாராமுகமாக இருக்கிறது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சிக்கு ஏதும் இல்லை. தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7½ கோடி மக்களின் விருப்பத்தினால் தான் ஆர்.கே.நகரில் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். அ.தி.மு.க.வை சசிகலாவால் மட்டுமே தொடர்ந்து வழிநடத்த முடியும். இப்போது மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். மக்கள் ஏமாற மாட்டார்கள். மக்களுக்கெதிரான இந்த அரசு விரைவில் அகற்றப்படும். அப்போது ஜெயலலிதாவின் அரசு அமையும். அந்த அரசு அமையும் போது சுவாமிமலையில் பஸ் நிலையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.