ஆர்.கே.நகர் பிரச்னைகளை தீர்க்காவிட்டால், கோட்டையை முற்றுகையிடுவோம்’ என வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த டிடிவி தினகரன் கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தின் நின்று ஜெயித்த டிடிவி தினகரன் ஜனவரி 3-ம் தேதி மாலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அந்தத் தொகுதிக்கு வந்தார். தண்டையார்பேட்டையில் தொகுதி அலுவலகம் திறந்து வைத்த அவர், காரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
டிடிவி தினகரன் அப்போது பேசியதாவது : ‘பெரியகுளம் எம்.பி.யாக நான் இருந்தபோது, மாதத்தில் பாதி நாட்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி இல்லத்தில் தங்கியிருந்து மக்கள் பணியாற்றினேன். அதேபோல ஆர்.கே.நகரில் வெற்றிவேல் இல்லத்தில் வாரத்தில் 3 நாட்கள் தங்கியிருந்து தொகுதி மக்களின் பிரச்னைகளை கவனிப்பேன். அடுத்த சில நாட்களில் தொடர்ந்து வார்டு வாரியாக வந்து நன்றி கூறுவேன்’ என்றார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரன் தொடர்ந்து நிருபர்களிடம் பேசுகையில், ‘மக்கள் பிரச்னைக்காக தேவைப்பட்டால் அமைச்சர்களை அணுகுவேன். கட்சிப் பிரச்னை பங்காளி சண்டை. மக்கள் பிரச்னையை அமைச்சர்கள் செய்தாகணும். இல்லாட்டி அதை எப்படி செய்ய வைக்கணும்னு எனக்கு தெரியும்.
ஆர்.கே.நகர் மக்கள் விழிப்புணர்வு உள்ளவங்க. 50000 பேரு இல்ல, ஒரு லட்சம் பேரு வேணும்னாலும் செக்ரட்டரியேட்டுக்கு வருவாங்க. அதனால முதல்ல அமைதியா கேட்டுப் பார்ப்போம். மக்கள் பிரச்னையை எந்த அரசாங்கமும் அப்படி ஒதுக்க முடியாது.’ என்றார் டிடிவி தினகரன்.