மார்ச் 15ல் கட்சிப் பெயரை அறிவிக்கிறார் தினகரன்! மதுரையில் 'மையம்' கொள்ளும் மற்றொரு புயல்!

மார்ச் 15ம் தேதி, மதுரையில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கிறார் தினகரன்

மார்ச் 15ம் தேதி, மதுரையில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவிக்கிறார் தினகரன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ttv dhinakaran..,,

மதுரை மாவட்டம் மேலூரில், வரும் மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் விழாவில், காலை 9 மணிக்கு தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்து கொடியை அறிமுகப்படுத்துகிறார் டிடிவி தினகரன்.

Advertisment

ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற தினகரன், அதிமுகவை கைப்பற்றுவதில் முனைப்பாக இருந்தார். ஆனால், ஓ.பி.எஸ்-ஐ விட சாதுர்யமாகவும், சாமர்த்தியமாகவும் செயல்பட்டு வரும் இ.பி.எஸ், தினகரனின் எண்ணத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்து வருகிறார். ஜெயலலிதா இறந்தபிறகு ஏற்பட்ட பல அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், எதிர்ப்புகளை சமாளித்து, வெற்றிகரமாக ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்துள்ளார்.

ஓ.பி.எஸ்ஸும், மனதில் ஆயிரம் குமுறல்கள் இருந்தாலும், தினகரன் கையில் கட்சியை விட்டு விடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார். ஆர்.கே.நகரில் தோற்றாலும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணை ஆட்சியை கெட்டியமாக இதுவரை பிடித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும், 6 மாதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கலையும் என்று டிடிவி சொல்லி வருகிறார். அதோடு அதிமுகவில் தன்னுடைய ஸ்லீப்பர் செல் இருப்பதாகவும் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால், ஸ்லீப்பர் செல்கள் ஸ்லீப்பிங் மோடுக்கே சென்றுவிட்டார்கள் போல.. அந்த செல்களால் இதுவரை எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இருக்கிறார்களா என்றே தெரியவில்லை.

Advertisment
Advertisements

இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தனக்கு அபார வெற்றியை பெற்றுத் தந்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக் கோரி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கே குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

மேலும், கட்சிக்கு தினகரன் கோரும் பெயர்களில் ஒன்றை ஒதுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தனது கட்சியின் பெயர்களாக 3 பெயர்களை தினகரன் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தார்.

அனைத்து இந்திய அண்ணா அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் அம்மா திமுக, எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் என்ற 3 பெயர்களை தினகரன் தேர்தல் ஆணையத்திடம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தான், வரும் மார்ச் 15ம் தேதி, மதுரை மாவட்டம் மேலூரில் நடக்கவுள்ள விழாவில், தனது கட்சியின் கொடியை மற்றும் பெயரை டிடிவி தினகரன் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21ம் தேதி, மதுரை ஒத்தகடை மைதானத்தில் அமைக்கப்பட்ட நடந்த பொதுக் கூட்டத்தில், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தனது கட்சிக் கொடியை ஏற்றி, கட்சியின் பெயரை 'மக்கள் நீதி மய்யம்' என்றும் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது தினகரனும், தனது புதிய கட்சியை மதுரை மண்ணில் அறிமுகம் செய்கிறார். இதற்கு பிறகு, தனது தனிப்பட்ட பலத்தை ஒவ்வொரு முறையும் தினகரன் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

Madurai Ttv Dhinakaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: