மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், பெண்களின் பங்கேற்பு.
தி.மு.க கூட்டணியில், தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், தூத்துக்குடியில் கனிமொழி, கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அதே போல, பா.ஜ.க கூட்டணியில் தமிழிசை சௌந்தரராஜன், விருதுநகரில் ராதிகா சரத்குமார், தருமபுரியில் பா.ம.க சௌமியா அன்புமணி என நட்சத்திர வேட்பாளர்களாக பெண்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
மக்களவைத் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு குறுகிய கால அவகாசமே உள்ளதால், ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்கிற விதமாக பெண் வேட்பாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் சூறாவளியாக அனல் பறக்க பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில், பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தேனி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். டி.டி.வி தினகரனை எதிர்த்து தி.மு.க-வில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அதே போல, அ.தி.மு.க கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால், தேனி தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தேனி தொகுதியில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் மனைவி அனுராதா, தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கி தனது கணவரை ஆதரித்து வாக்கு சேகரித்துள்ளார்.
தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரனுக்காக மக்களிடம் வாக்கு சேகரித்த அனுராதா வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களை நோக்கி, “என்னை யார் என தெரிகிறதா? மக்கள் செல்வர் டி.டி.வி. தினகரனின் மனைவிதான் நான்.. தினகரனின் சின்னம் எது தெரியுமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டபடியே அனுராதா தினகரன் அனல் பறக்க பிரசாரம் செய்தார்.
டி.டி.வி. தினகரன் மனைவி அனுராதா அரசியல் களத்தில் புதியவர் என்றாலும் அவருடைய தேர்தல் பிரசார முறை தேனி வாக்காளர்களை ஈர்த்து வருகிறது. டி.டி.வி தினகரன் போட்டியிடும் தேனி தொகுதி இதற்கு முன்னர் பெரியகுளம் தொகுதியாக இருந்த போது டி.டி.வி தினகரன் எம்.பி.யாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“