ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னத்தில் போட்டியிட உள்ளதாக, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மறுநாளே, காலியாக உள்ள ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனைக்கு பிறகு முடிவெடுத்து அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளன. இந்நிலையில், கட்சியின் பெயரும், சின்னமும் இல்லாத டிடிவி தினகரன் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. கடந்த முறை நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், இம்முறை போட்டியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த நிலையில், திருப்பூரில் அதிமுக அம்மா அணியின் கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அந்த அணியின் அவைத்தலைவர் அன்பழகன் கூறியதாவது, “அதிமுக அம்மா அணி சார்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவார். அவர் வெல்வது உறுதி”, என தெரிவித்தார்.
அதேபோல், கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், “ஆட்சி மன்றக்குழுவில் என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. அதிமுக சின்னத்தை மீட்க இரட்டை இலையை எதிர்த்து போட்டியிடவேண்டிய சூழல் உருவாகி உள்ளது. உச்ச நீதிமன்றம் சென்று சட்டப்படி இரட்டை இலையை மீட்போம். ஆர்.கே. நகரில் தொப்பி சின்னத்தில் போட்டியிட உள்ளேன்.”, என தெரிவித்தார்.