ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை ஜெயிக்க வைப்போம் எனக் கூறிய அமைச்சர் ஜெயகுமார், டிடிவி.தினகரன் டெப்பாசிட் இழப்பார் என்றும் தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்பு மனுத் தாக்கல் நவம்பர் 27-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 4-ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்! எனவே வேட்பாளர்களை துரிதமாக முடிவு செய்யவேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மீண்டும் மருது கணேஷ் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதிமுக அம்மா அணி சார்பில் மீண்டும் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், தீபா அணி சார்பில் ஜெ.தீபா ஆகியோரும் மீண்டும் களம் காண்கிறார்கள்.
ஆர்.கே.நகரில் ஒருங்கிணைந்த அதிமுக.வின் வேட்பாளர் யார்? என்பது பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளானது. அதிமுக.வின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் அல்லது பாலகங்காவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாகவே விவாதம் நடந்தது. இந்தச் சூழலில் இன்று கூடிய அதிமுக ஆட்சி மன்றக் குழுவில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டார்.
மதுசூதனன் வேட்பாளர் ஆக அமைச்சர் ஜெயகுமார் தரப்பிலேயே முட்டுக்கட்டை போடப்பட்டதாக பேச்சு நிலவியது. இந்தச் சூழலில் மதுசூதனன் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து வெளியே வந்த அமைச்சர் ஜெயகுமாரிடம் இந்தத் தேர்வு குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அப்போது ஜெயகுமார் கூறுகையில், ‘ஆர்.கே.நகரில் போட்டியிடும் கழக அவைத்தலைவர் மதுசூதனன் வெற்றி பெறுவார். கழக வெற்றிக்கு பாடுபட்டு, எதிரிகளை டெப்பாசிட் இழக்கச் செய்வோம்.’ என்றார். டிடிவி தினகரன் குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘தினகரனும் அங்கு டெப்பாசிட் இழப்பார்’ என்றார் ஜெயகுமார்.
‘வேட்பாளர் தேர்வில் இழுபறி நிலவியதா?’ என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்திடம் கேட்டபோது, ‘எந்த இழுபறியும் இல்லை. நூறு சதவிகிதம் ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவோம்’ என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.