தமிழக சட்டமன்றத் தேர்தலில், அமமுக கூட்டணியில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
ஐதராபாத்தை தளமாகக் கொண்டு அகில இந்தியா மஜிலிஸ்-இ இத்தெஹதுல் முஸ்லிமின் கட்சி (ஏ.ஐ.எம்.ஐ.எம்) செயல்பட்டு வருகிறது. இக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் தேர்தலில் 24 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பீகார் தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் அக்கட்சிக்கு தேர்தல் அரசியலில் ஒரு அகில இந்திய கவனம் கிடைத்தது. இந்த வெற்றி அக்கட்சிக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்தது.
தமிழகத்தில், இதற்கு முன்பு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி வாணியம்பாடி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது.
தற்போது நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி இங்குள்ள அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சுகள் எழுந்தன.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக திமுக சார்பில் நடந்த சிறுபான்மையினர் மாநாட்டில், ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் மாநாட்டில் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியானது. ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்பட்டது. இதற்கு, திமுக கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சிகள் அதிருப்தி தெரிவித்ததால், மாநாட்டுக்கு ஓவைசிக்கு மரியாதை நிமித்தமாக அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. அவர் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுமா அல்லது தமிழகத்தில் ஏதேனும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துவந்தது.
இந்த நிலையில், அமமுக கூட்டணியில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில், திரு.அசதுத்தீன் உவைசி M.P., அவர்கள் தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு. pic.twitter.com/gJeEyhqQSf
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 8, 2021
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அமமுகவும் பாரிஸ்டர் அசாதுதீன் ஓவைசி எம்.பி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமமுகவுக்கும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அமமுக தலைமையிலான கூட்டணியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு தமிழ்நாட்டில் 1.வாணியம்பாடி, 2.கிருஷ்ணகிரி 3.சங்கராபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.” என்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமுகவுடன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் செய்திருப்பது இந்திய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.