டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வில் இருந்து 2 மாவட்டச் செயலாளர்கள் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க-வில் இணைந்ததால் அ.ம.மு.க கரைகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அணி மற்றும் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் அணி என்று பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க-வின் பொதுக்குழு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பின்படி, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக இருக்கிறார். உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டு அ.ம.முக தொடங்கிய டி.டி.வி தினகரன் அ.தி.மு.க தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று பேசி வருகிறார். அதே போல, சசிகலாவும் அ.தி.மு.க-வைக் காப்பாற்ற தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வருகிறார்.
இந்நிலையில், டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வில் இருந்து 2 மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளனர்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளராக இருந்து வந்த பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளராக இருந்து வந்த அய்யனார் ஆகியோர் அ.ம.மு.க-வில் இருந்து திடீரென விலகி இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க-வில் இணைந்தனர். இதில், பாலசுந்தரம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த மண்டல செயலாளராகவும் இருந்து வந்தார்.
அ.ம.மு.க விழுப்புரம் மாவட்டச் செயலாளர்களாக இருந்த பாலசுந்தரம், அய்யனார் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது, அ.தி.மு.க.வை சேர்ந்த வானூர் தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணி, முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ், திண்டிவனம் நகர செயலாளர் வக்கீல் தீனதயாளன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதனிடையே, இ.பி.எஸ் பக்கம் தாவிய அ.ம.மு.க விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் பாலசுந்தரம், அய்யனார் ஆகிய 2 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை, குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி களங்கம் ஏற்படுத்தி அவப்பெயரை உண்டாக்கிய காரணத்திற்காகவும் விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர்கள் பாலசுந்தரம்(வடக்கு), அய்யனார்(கிழக்கு) ஆகியோர் அ.ம.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். இவர்களுடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.கவில் இணைந்த அ.ம.மு.க விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் பாலசுந்தரம், அய்யனார் இருவரும் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வில் இருந்து 2 மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க-வில் இணைந்ததால் அ.ம.மு.க கரைகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“