தமிழ்நாட்டில் பல அரசியல் கூட்டணிகள் கட்சிக்காரர்களின் திருமண நிகழ்ச்சிகளில்தான் உறுதிப்படுத்தப்படும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது.
தமிழ்நாடு அரசியலில் நண்பர்களாக திமுக என்ற ஒரே கட்சியில் இருந்த கருணாநிதியும் எம்.ஜி.ராமச்சந்திரனும் இரு துருவங்களாக பிரிந்த பின் அவர்கள் மீண்டும் சந்திக்க வாய்ப்பு இல்லை என்று எல்லோரும் நினைத்தபோதுதான், காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தனின் மகள் தமிழிசையின் திருமணத்தில் சந்தித்துக்கொண்டார்கள். திமுகவின் பல தேர்தல் கூட்டணிகள் திருமணங்களில் உறுதியாகியுள்ளது. கருணாநிதியின் பல அரசியல் கூட்டணி முடிவுகள் அரசியல் கட்சி நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களில் தான் உருவானது என்பது வரலாறு.
அந்த வகையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரணியின் திருமணம் தற்போதைய அரசியல் சூழலில் அரசியல் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவருக்கும் ஒரு சவாலாக இருந்துவந்தார். ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சசிகலா அரசியலில் இருது தற்காலிகமாக ஒதுங்க முடிவெடுத்ததால் அமமுக படுதோல்வி அடைந்தது. ஆனால், அதிமுக பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. ஈ.பி.எஸ் கட்சியில் தனது பிடியை ஓ.பி.எஸ்-ஐத் தாண்டி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சசிகலா அதிமுக மீட்டெடுப்பேன் என்று அதிமுக நிர்வாகளிடம் போனில் பேசி வருகிறார். சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் போனில் பேசிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சசிகலா ஆடியோ வெளியிட்டு பூச்சாண்டி காட்டியதை அதிமுக தலைமை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை. சசிகலாவுடன் போனில் பேசிய 15 பேர்களையும் கூண்டோடு நீக்கினார்கள். இதனால், அதிமுகவில் பலரும் எச்சரிக்கையாகியுள்ளனர். சசிகலா கோவிட் தாக்கம் குறைந்ததும் அரசியலுக்கு வருவேம் பாடுபட்டு கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியை அழிந்து போக விடமாட்டோம் என்று அதிமுக நிர்வாகிகளுடன் போனில் பேசுகிறார். அப்படியானால், சசிகலா வெறுமனே போனில் பேசிக்கொண்டிருக்கப் போகிறாரா? அல்லது அதிமுக தொண்டர்களை தன் பக்கம் எப்படி ஈர்க்கப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எப்படியானாலும் அதிமுகவை மீட்டெடுப்பது என்பது சசிகலாவுக்கு சவாலான ஒன்றுதான். ஏனென்றால், கட்சியில் ஈபிஎஸ் தனது பிடியை வலுவாக வைத்திருக்கிறார். இதனால், சசிகலா பின்வாங்குகிறார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சசிகலாவுக்கு அதிமுகவில் உண்மையிலேயே யாரையும்விட மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது என்றால் அவர் எதற்கு வெறுமனே ஆடியோக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால், அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் பலரையும் அழைக்க வேண்டும் என்றால் அதற்கு சசிகலாவுக்கு ஒரு மாஸ்டர் பிளான் தேவை என்பது தெளிவாகிறது. ஏற்கெனவே அதிமுகவில் சசிகலாவின் குடும்பம் ஆதிக்கம் இருந்ததால்தான் அவர் மீது அதிருப்தி நிலவியதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதனால், டிடிவி தினகரனின் மகள் திருமணம் மூலம் அரசியல் பயணத்தை தொடங்கினால் இந்த விமர்சனம் உறுதிப்படும் என்பதால் சசிகலா பின்வாங்குவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரணியை காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் சசிகலா தலைமையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஜூன், 13ம் தேதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் தனது மகள் திருமணத்துக்கு உறவினர்கள் மட்டுமின்றி, பல்வேறு கட்சிகளைத் சேர்ந்த விஐபிக்கள் ஏராளமானோரை அழைத்திருந்தார்.
தனது மகளின் திருமணத்துக்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை அழைப்பதன் மூலம் தங்களுக்கு அதிமுகவில் இன்னும் செல்வாக்கு இருக்கிறது எனக் காட்டுவதற்காகத்தான் டிடிவி தினகரகன் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணத்துக்கு 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதனால், சசிகலா உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற்க முடியாது என்பதால் டிடிவி தினகரன் ஜூன் 13ம் தேதி நடைபெற இருந்த தனது மகளின் திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
டிடிவி தினகரனின் மகள் திருமணம் வருகிற ஜூலை அல்லது செப்டம்பர் மாதத்தில் ஏதாவது ஒரு தேதியில் நடத்தி கொள்ள கோவில் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் மகள் திருமணம் தள்ளிப் போனதற்கு காரணம், டெல்டா பகுதி மக்களால் கல்வித் தந்தை என அழைக்கப்பட்ட பூண்டி துளசி வாண்டையாரின் பேரன் தான் மணமகன். சமீபத்தில், வாண்டையார் இறந்ததும் திருமணம் தள்ளிப்போனதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள்.
எப்படியானாலும், டிடிவி தினகரனின் மகள் திருமணம் நடக்கும்போது அதிமுக நிர்வாகிகள் பெரிய அளவில் கலந்துகொண்டால் அதிமுகவில் ஒரு பெரிய அரசியல் பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.