scorecardresearch

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் அணியில் இருப்போம்: டி.டி.வி தினகரன்

எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ள வெற்றி தற்காலிகமானது தான். நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் அணியில் இருப்போம் என திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் அணியில் இருப்போம்: டி.டி.வி தினகரன்

எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ள வெற்றி தற்காலிகமானது தான். எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலையை கொடுத்தால் அது இன்னும் பலவீனப்படும். பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பலத்த அடி விழும். பாராளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் அணியில் இருப்போம் என திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சி சங்கம் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. அதனை தனி நீதிபதி தொடர்ந்து விசாரிப்பார் என்றும், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் மேல்முறையீடு செய்யலாம் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

ஆகவே, இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த தற்காலிக வெற்றி. இந்த வெற்றியின் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. ஜெயித்து விடுமா? ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும். இந்த இந்த தீர்ப்புக்கு பின்னணியில் யாரும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் 2017 ஏப்ரல் முதல் அ.தி.மு.க.வை டெல்லி தான் இயக்குகிறது என்பது உண்மைதான். எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலையை கொடுத்தால் அது இன்னும் பலவீனப்படும். ஆட்சி அதிகாரத்தில் கிடைத்த பண பலம், மமதை ஆகியவற்றை வைத்துக்கொண்டு தன்னை தலைவராக அறிவித்துக் கொண்டுள்ளார். இப்போது பொதுக்குழுவையும் வசப்படுத்தி தனக்கு சாதகமாக்கி கொண்டு இருக்கிறார். அதை மீறி காலம் அவருக்கு தீர்ப்பு சொல்லும்.

முதல் ரவுண்டில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். இரண்டு, மூன்றாவது ரவுண்டுகளில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். இன்னும் நான்கு, ஐந்து ரவுண்டுகள் இருக்கிறது பார்ப்போம். அதேபோல், எடப்பாடி பழனிசாமியுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைய வாய்ப்பு இல்லை. நாங்கள் ஏற்கனவே தனிக்கட்சி தொடங்கி இருக்கிறோம். அம்மாவின் கொள்கைகள் லட்சியங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் கொண்டு செல்வோம். தென்னை மரத்திற்கு தேள் கொட்டினால் பனை மரத்துக்கு ஒன்றும் ஆகாது. ஓபிஎஸ் மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து ஒரு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தற்காலிக பின்னடைவு தான். இதை வைத்துக்கொண்டு என்னுடைய கட்சியில் அவரை அழைப்பது நாகரிகமாக இருக்காது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தீய சக்தி தி.மு.க.வுக்கும், துரோக சக்தி அ.தி.மு.க.வுக்கும் எங்கள் ஆதரவு கிடையாது என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். இந்த தேர்தலில் வேண்டுமானால் ஆளுங்கட்சி ஜெயிக்கலாம். ஆனால், 60 மாதத்தில் வரக்கூடிய கெட்ட பெயரை இரண்டு ஆண்டுகளில் தி.மு.க. சம்பாதித்துள்ளது. எஞ்சியுள்ள வாக்குறுதிகள் என தி.மு.க. வாய்ஜாலம் அடித்துக் கொள்கிறது. இடைத்தேர்தலில் தப்பித்துக் கொள்ளலாம், ஆனால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பலத்த அடி விழும். சீமான் ஜாக்கிரதையாக பேச வேண்டும். கமல்ஹாசனின் செயல்பாடு நகைச்சுவையாக இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் அணியில் இருப்போம். இல்லையென்றால் தனித்து களம் காண்போம்” எனத் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மாநில பொருளாளர் ஆர்.மனோகரன், தொட்டியம் ராஜசேகரன் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ttv dinakaran about admk general council meeting verdict

Best of Express