டிடிவி தினகரனுக்கு தேர்தலில் போட்டியிட குக்கர் சின்னம் ஒதுக்கி உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஆர்,கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோகமாக வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை வழங்கியிருந்தது. அந்த சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதாலும், மக்கள் மனதில் குக்கர் சின்னம் நன்கு பதிந்து விட்டதால், வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தனக்கு குக்கர் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு டிடிவி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு, இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. அதில் இனிவரும் தேர்தலில் டிடிவி குக்கர் சின்னத்தில் போட்டியிடலாம் என்று, அவருக்கு குக்கர் சின்னத்தை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் பின்பே, டிடிவி மேலூரில் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்தார். இந்நிலையில், டிடிவிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று(28.3.19) நடைப்பெற்றது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். இதில், டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இரட்டை இலை சின்னம் வழக்கில் இரு தரப்பும் கூடுதலாக ஆவணங்களை தாக்கல் செய்யக்கூடாது என்றும் வழக்கை 3 வாரத்துக்குள் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.