டிடிவி.தினகரன் புதிய கட்சி : ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’

டிடிவி.தினகரன் புதிய கட்சியை இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்க இருக்கிறார். இதற்கான கூட்டம் மதுரையில் மேலூரில் நடந்து கொண்டு இருக்கிறது.

டிடிவி தினகரன் புதிய கட்சி அறிவிப்பையொட்டி மதுரை, மேலூரில் கோலாகல விழா நடத்தினர். மாநிலம் முழுவதும் இருந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் திரண்டனர்.

டிடிவி தினகரன், அதிமுக.வின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்டார். ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு காட்சிகள் மாறின. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கை கோர்த்து டிடிவி தினகரனை கட்சியை விட்டு நீக்கினர்.

டிடிவி தினகரன், ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு ஜெயித்து திருப்புமுனையை உருவாக்கினார். அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள புதிய கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்தார் அவர். இதற்கு சசிகலாவின் ஒப்புதலையும் பெற்றார். ‘அதிமுக.வையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்கவே தற்காலிகமாக புதிய கட்சியை ஆரம்பிக்கிறேன்’ என முந்தையை பேட்டிகளில் குறிப்பிட்டார் டிடிவி தினகரன்.

டிடிவி தினகரன் அணியின் அடுத்தகட்ட முக்கிய நகர்வாக இந்த புதிய கட்சி அறிவிப்பு விழா, மதுரையை அடுத்த மேலூரில் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. அதன் LIVE UPDATES

காலை 10.50 : திடலில் 108 அடி கொடிக்கம்பத்தில் புதிய கொடியை டிடிவி தினகரன் ஏற்றினார்.

காலை 10.37: உறுப்பினர் படிவங்களை மேடையில் நிர்வாகிகளிடம் டிடிவி தினகரன் வழங்கினர். அதிகமாக அரசியல் பேசாத டிடிவி தினகரன், 15 நிமிடங்களில் பேச்சை முடித்துக்கொண்டார்.

காலை 10.35 : ‘அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்க இருக்கிறேன். எந்தக் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு உறுப்பினர் சேர்க்கையை நாம் நடத்தி முடிக்க வேண்டும்’ என்றார் தினகரன்.

காலை 10.30 : ‘இந்தக் கொடியை வடிவமைத்தவர், தஞ்சையில் ஒரு வட்டச் செயலாளராக பணியாற்றும் வெங்கட்ரமணி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இயக்கம் விவசாயிகள் பிரச்னை உள்பட தமிழக மக்களின் பிரச்னைகளுக்கு துணை நிற்கும்’-டிடிவி

காலை 10.22 : டிடிவி பேசுகையில், ‘துரோகிகள் பன்னீர் அன்ட் கோ கொடுத்த மனுவால் இரட்டை இலை சின்னத்தை முடக்கியதால் ஆர்.கே.நகரில் அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி என்கிற பெயரில் தொப்பி சின்னத்தில் முதலில் நின்றோம். ஆனால் அதன்பிறகு கட்சியையும் கொடியையும் மதுசூதனன் தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

அதன்பிறகு சுயேட்சையாக ஆர்.கே.நகரில் போட்டியிட்டு திமுக.வை டெப்பாசிட் இழக்க வைத்தோம். கட்சியின் பெயர் இல்லாமல் ஒரு கூட்டத்திற்கு அனுமதி பெறுவதில்கூட சிக்கல் இருக்கிறது. எனவேதான் டெல்லியில் தொடர்ந்த வழக்கு முடியும் வரை இடைக்காலமாக குக்கர் சின்னத்துடன் ஒரு இயக்கம் பெயரில் செயல்பட வேண்டும்.

அதிமுக.வை மீட்க இயக்கத்தின் பெயரை அறிவிக்கிறேன். நமது இயக்கத்தின் பெயர், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’. கட்சிக் கொடியில் அண்ணா படத்திற்கு பதிலாக ஜெயலலிதா உருவம் பொறித்த புதிய கொடியை டிடிவி தினகரன் அறிமுகப்படுத்தினார்.

காலை 10.20 : மேடையில் டிடிவி தினகரன் பேச்சை ஆரம்பித்தார்.

காலை 10.00 : கொள்கைப் பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பேசுகையில், ‘இந்த நிகழ்ச்சி ஒரு அமைப்பின் பெயரை சூட்டுவதற்கும், ஒரு கொடியை அறிமுகப்படுத்துவதற்கும், அதிமுக.வை வழிநடத்தும் தகுதி அண்ணன் தினகரனுக்கு மட்டும்தான் உண்டு என்பதை நிரூபிக்கும் மாநாடு! அடுத்து உள்ளாட்சித் தேர்தலோ, சட்டமன்றத் தேர்தலோ வந்தாலும் அண்ணன் தினகரன் 100 சதவிகித வெற்றி பெறுவார்.

காலையில் நாங்கள் ரோடு முழுவதும் மக்கள் வெள்ளத்தை பார்த்தோம். ஒன்றரை கோடி தொண்டர்களும் டிடிவி தினகரன் பக்கம் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தக் கூட்டம் சாட்சி.’ என்றார் தங்க தமிழ்செல்வன்.

காலை 9.55 : முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளருமான கே.டி.பச்சைமால், திருச்சி மனோகரன் ஆகியோர் அடுத்தடுத்து பேசினர். மனோகரன், ‘நீதிக்கு இது ஒரு போராட்டம், நிச்சயம் இதை உலகம் பாராட்டும்’ என்றார்.

காலை 9.50 : வழி நெடுக கூட்டத்திற்கு மத்தியில் டிடிவி தினகரன் மேடையை அடையவே 2 மணி நேரம் பிடித்தது. காலை 9.50 மணிக்கு மேடைக்கு வந்து சேர்ந்தார். அங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காலை 9.15 : டிடிவி தினகரன் வழிநெடுக கூட்டம் திரண்டு நிற்க, திறந்த வேனில் ஊர்வலமாக விழா மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டார். வழி நெடுக சசிகலாவையும், தினகரனையும் வாழ்த்தி கோஷமிட்டனர்.

காலை 9.00 : மதுரை மேலூர் விழாவில் பேசிய நடிகை சி.ஆர்.சரஸ்வதி, ‘ஓ.பி.எஸ்.ஸுக்கு மனசாட்சியே கிடையாதா? பெரியகுளத்தில் சாதாரண நபராக இருந்த ஓபிஎஸ்.ஸை முதல்வர் பதவி வரை கொண்டு வந்த தினகரனுக்கு செய்த துரோகத்திற்கு மன்னிப்பு கிடையாது. நிச்சயம் அதிமுகவை மீட்போம்’ என்றார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close