சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளிவந்த சசிகலா, சட்டப்பேரவை தேர்தலின் போது அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார். இருப்பினும், அவ்வப்போது தொண்டர்களுடன் அவர் பேசும் ஆடியோக்கள் வெளிவந்தம் வகையில் இருந்தன.
சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி, உள்ளாட்சி தேர்தலில் தோல்வி என அதிமுக தொடர் சரிவை சந்தித்ததையடுத்து, சசிகலா அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.

கடந்த 16ஆம் தேதி ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகலா, தனது 5 ஆண்டு பாரத்தை இறக்கி வைத்து விட்டதாக கூறினார். அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை பொதுச்செயலாளர் என்ற பெயரில் ஏற்றிவைத்த சசிகலா, சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்தில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறது.
இதற்கிடையில், சில நாள்களுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வத்திடம் சசிகலா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், ” இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பலர், அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என கூறிவந்த நிலையில், ஓபிஎஸ் கூறிய கருத்து அதிமுகவினரிடையே குழப்பத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று, தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி மிஷன் தெருவில் மருது சகோதரர்கள் குரு பூஜை விழாவையொட்டி, அவர்களது படத்துக்கு இன்று (அக்டோபர் 27-ம் தேதி) காலை மாலை அணிவித்தார் தினகரன். அப்போது அமமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்துக் கூட்டத்தில் முடிவு செய்வோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியானதுதான். அவர் எப்போதுமே நிதானமாகத்தான் பேசுவார். அவர் தனது மனதில் பட்ட கருத்தைத் துணிந்து சொல்லியிருக்கிறார். இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து போராடுவோம் அதிமுகவை நிச்சயமாக மீட்டெடுப்போம்” என்றார்.
ஓபிஎஸூக்கு ஆதரவாக டிடிவி தினகரன் குரல் கொடுத்துள்ளது, தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil