அரசியல்ரீதியாக எத்தனையோ சோதனைகள் வந்த போதிலும் மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை தவிர்த்து வந்தார், டிடிவி.தினகரன். ஒட்டு மொத்த குடும்பத்தினர் மீதும் மிகப்பெரிய சோதனை நடக்கும் போது, முதல் முறையாக மத்திய அரசுக்கு எதிராக பேசியுள்ளார். ரெய்டுக்கு காரணமானவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களை தமிழ்நாட்டில் காலூன்ற விட மாட்டோம் என்று ஆவேசமாக சொல்லியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வி.கே.சசிகலா பின்னால் ஓரணியும், ஓ.பன்னீர்செல்வம் பின்னால் ஓரணியாகவும் கட்சி பிளவுப்பட்டது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போன போது, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட பின்னர், டிடிவி தினகரனும் திகார் ஜெயிலுக்குப் போனார். அதன் பின்னர் டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு, இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைந்தன.
அதன் பின்னர் ஒவ்வொரு முறையும் சசிகலா குடும்பத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், டிடிவி தினகரன் மத்திய அரசுக்கு எதிராக எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தார். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வந்த பின்னர் நிருபர்கள் கேட்ட போதுகூட, மத்திய அரசுக்கு எதிராக பேசவில்லை. ‘மத்திய அரசு எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி எடுப்பதாக தெரிந்தால் சொல்கிறேன்’ என்று வழுக்கலாக பதில் சொன்னார்.
மதுரையில் முதல் பொதுக்கூட்டம் பேச இருந்த நிலையில், நமது எம்.ஜி.ஆர். இதழில் ‘மோடியா லேடியா?’ என்று ஜெயலலிதா கேட்டதை ஞாபகப்படுத்தி, பாஜக எப்படியெல்லாம் அதிமுகவை உடைக்கிறது என்று கடுமையான விமர்சனங்களோடு கவிதை எழுந்தியிருந்தார், அந்த நாளிதழின் ஆசிரியர், அழகுராஜ் என்ற சித்திரகுப்தன்.
தொண்டகள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த கவிதை பெற்றுத் தந்தது. ஆனால் டிடிவி தினகரன் வேறு மாதிரி பார்த்தார். ‘நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் சில கருப்பு ஆடுகள் புகுந்து விட்டது. கவிதை எழுதிய சித்திரகுப்தன் பணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார்’ என்று பேட்டியளித்தார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபியை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
நீட் தேர்வு போன்ற முக்கிய பிரச்னைகளின் போது கூட அவர், மத்திய அரசுக்கு எதிராக மென்மையான போக்கையே பயன்படுத்தி வந்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாண்டு நினைவு நாளின் போது கூட, ‘திட்டம் நல்ல எண்ணத்தோடுதான் கொண்டு வரப்பட்டது. ஆனால் செயல்படுத்திய விதம்தான் சரியில்லை’ என்று மழுப்பலாக பதில் சொன்னார். எதிர்கட்சிகள் எல்லாம் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய போதும், டிடிவி தினகரன் அதை செய்யவில்லை. இந்நிலையில் இன்று அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் அத்தனை பேர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதும், இதுவரை காத்து வந்த மவுனத்தை கலைத்துவிட்டார்.
அடையாரில் உள்ள வீட்டில் நிருபர்களிடம் அவர் பேசும் போது, ‘இந்த சோதனைக்கெல்லாம் யார் காரணம் என்பது எனக்குத் தெரியும். அவர்களை தமிழகத்தில் காலூன்றவிடமாட்டோம்’ என்று ஆவேசமாக பதிலளித்தார். மத்திய அரசுடன் இனி இணக்கமாக போக முடியாது என்ற நிலையில் எதிர்ப்பு நிலையை எடுத்துவிட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.